‘ பசிக்குதா வாங்க சாப்பிடுங்க ’ - தன்னார்வ அமைப்பின் இலவச உணவு சேவை

தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிரில், ‘மை தருமபுரி’ அமைப்பு சார்பில் இலவசமாக விநியோகம் செய்யப்படும் உணவுப் பொட்டலங்கள்
தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிரில், ‘மை தருமபுரி’ அமைப்பு சார்பில் இலவசமாக விநியோகம் செய்யப்படும் உணவுப் பொட்டலங்கள்
Updated on
1 min read

தருமபுரியில் தினமும் ஏழை, எளியோருக்கு இலவசமாக உணவு வழங்கும் தன்னார்வ அமைப்பின் பணி பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

தருமபுரியில், ‘மை தருமபுரி’ என்ற தன்னார்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. பட்டதாரி இளை ஞர்கள், வர்த்தகத்தில் ஈடுபடுவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இதில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் தருமபுரி நகரில் ஆதரவற்ற முதியவர்களுக்கு தினமும் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.

தருமபுரி-சேலம் சாலையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் சாலையோரம் தினமும்பகலில் மேசை ஒன்று வைக்கப்படுகிறது. அதன்மீது கண்ணாடி அடுக்கு ஒன்றில் 30-க்கும் குறையாத உணவுப் பொட்டலங்கள் வைக்கப்படுகின்றன.

மேலும், அந்த மேசையின் முன்புறத்தில், ‘பசிக்குதா... வாங்க சாப்பிடுங்க’ என்று வாசகத்துடன் பதாகை ஒன்றும் தொங்க விடப்பட்டுள்ளது. தருமபுரி நகரில் நடமாடும் ஆதரவற்ற, ஏழை, எளியோர் பலர் தினமும் வந்து உணவுப் பொட்டலங்களை சாப்பிட்டு பசியாறுகின்றனர். அன்றைய தினம் போதிய வருமானம் இல்லாத ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் கூட சில நாட்களில் உணவுப் பொட்டலங்களை எடுத்துச் செல்கின்றனர். திருநங்கையரும் சில நாட்களில் பயன்பெறுகின்றனர்.

உணவுப் பொட்டலங்களை பார்த்த பிறகும் எடுக்கத் தயங்கும் முதியோர்களுக்கு பொட்டலங் களை, இவர்கள் கொடுக்கின்றனர். மேசையில் வைக்கப்படும் பொட்டலங்கள் தீர்ந்த பிறகு யாரேனும் உணவை நாடி வந்தால், சில நிமிடங்களில் அவர்களுக்கு பொட்டலங்கள் வரவழைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து, ‘மை தருமபுரி’ அமைப்பினர் கூறுகையில், ‘கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த ஓராண்டில் பலரும் வருமானம் பாதித்து தவிக்கின்றனர். நகரில் நடமாடும் ஆதரவற்றவர்களில் பலரது வயிறு பலவேளைகளில் உணவின்றியே வாடிக் கிடப்பதை அறிந்தோம்.

அதைத் தொடர்ந்து, தமிழ் புத்தாண்டு தினத்தில் இருந்து எங்கள் அமைப்பு மூலம் மதிய உணவு வழங்கும் சேவையை தொடங்கியுள்ளோம். தற்போது உணவுப் பொட்டலங்களை கடையில் வாங்கி விநியோகிக்கிறோம். அமைப்பில் உள்ள தன்னார்வலர்களும், அவர்களின் நட்பு வட்டத்தில் உள்ள கொடையாளர்களும் இந்த பணிக்காக நன்கொடை வழங்கி வருகின்றனர். தருமபுரி நகரில் நடமாடும் ஆதரவற்றவர்களின் மதிய உணவுத் தேவையை முடிந்தவரை நிறைவேற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறோம்’என்றனர்.

இந்த அமைப்பின் உணவு வழங்கும் சேவை குறித்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி, பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in