

கரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்துள்ளது. இதனால் 42 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. தொற்று பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து வெளிநாடுகள் மற்றும் அந்தமான், ஒடிசா, மணிப்பூர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு செல்ல கரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்ற சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்து வருகிறது. போதிய பயணிகள் இல்லாததால் விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
முழு ஊரடங்கான கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணிகள் வருகை 4 ஆயிரம், சென்னையில் இருந்து வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை 5 ஆயிரம் என மொத்தம் 9 ஆயிரமாக இருந்தது. நேற்று பயணிகள் வருகை 3 ஆயிரம், பயணிகள் புறப்பாடு 4 ஆயிரம் என 7 ஆயிரமாக குறைந்துள்ளது.
போதிய பயணிகள் இல்லாமல் மும்பை, டெல்லி, ஹைதராபாத், அகமதாபாத், கொச்சி, இந்தூர், அந்தமான், புவனேஸ்வர், மதுரை உள்ளிட்ட 42 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் 21 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படுபவை, 21 விமானங்கள் சென்னைக்கு வருபவை. பல விமானங்கள் குறைவான பயணிகளுடன் இயக்கப்பட்டன. பயணிகள் குறைவால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.
அந்தமான் பயணிக்கு கரோனா
நேற்று காலை 6 மணிக்கு அந்தமான் செல்லும் விமானம் புறப்பட தயாராக இருந்தது. பயணிகளிடம் கரோனா நெகட்டிவ் சான்றிதழை சரிபார்த்து அதிகாரிகள் விமான நிலையத்துக்குள் அனுமதித்தனர். அப்போது, அந்தமானை சேர்ந்த மார்சலாம் (40) என்பவரின் சான்றிதழை அதிகாரிகள் வாங்கிப் பார்த்தபோது தொற்று இருப்பதாக (கரோனா பாசிட்டிவ்) அதில் இருந்தது.
மருத்துவமனையில் அனுமதி
சொந்த ஊர் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்தார். இதை அதிகாரிகள் ஏற்கவில்லை. அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விமான நிலையம் வந்த சுகாதாரத் துறையினர், குணமான பிறகு, அந்தமான் செல்லலாம் என்று அவரை சமாதானப்படுத்தினர். கவச உடை அணிவித்து ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.