

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில், தமிழக அரசு அமல்படுத்தியுள்ள கரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன.
கூட்டத்துக்கு பிறகு ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசின் புதிய கரோனா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உரிய நிவாரணம், சலுகைகள் வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகம் தொடர்பாக முடிவு எடுக்கும்போது, கரோனா காலம் மட்டுமின்றி அனைத்து நிலையிலும் அரசோடு இணைந்து செயலாற்றும் வகையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைத்து அதன்படி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
வணிகர்கள் மீது வழக்குகள், அபராதம், தண்டனை மற்றும் கடைகளை பூட்டுதல் ஆகிய நடவடிக்கைகளை அரசு அதிகாரிகள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். நடுத்தர, பெரிய ஜவுளிக் கடை, நகைக் கடை, வணிக வளாகங்கள், திரையரங்குகள், மண்டபங்கள், உணவகங்கள், சுற்றுலா மையங்கள் போன்றவற்றில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் அன்றாட வயிற்றுப் பிழைப்பையும், அவல நிலையையும் அரசு கவனத்தில்கொண்டு, 50 சதவீத பணியாளர்களுடன் உரிய வழிகாட்டுதலுடன் வணிகம் நடைபெற அரசு உத்தரவிட வேண்டும்.
இக்கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்தில் அந்தந்த துறைசார்ந்த அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5-ம் தேதி வணிகர் தினம் அன்று சென்னையில் நடத்த உள்ள இந்திய வணிகர் பேரிடர் விடியல் மாநாட்டை 1,000 நலிந்த வணிகர்கள், சிகை அலங்கரிப்போர், சலவைத் தொழிலாளர்கள், பூ வியாபாரிகள் என பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவாகவும், நிதியளிப்பு விழாவாகவும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.