

உத்திரமேரூர் அருகேயுள்ள அழிச்சூர் கிராமத்தில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அம்புஜகுசலாம்பாள் சமேத அருளாலீஸ்வரர் கோயில் உள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் தற்போது உரிய பாமரிப்பில்லாமல், முட்புதர்கள் சூழ்ந்தும், சுவர்கள், கருவறை விமானம் இடிந்து சரிந்தும், பாழடைந்த கட்டிடமாக காட்சியளிக்கிறது. பாழடைந்த இக்கோயிலில் கலை நயமிக்க சிலைகள் உள்ளன. இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக 20 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இக்கோயிலின் படிக்கட்டுகளில் கல்வெட்டு எழுத்துகளும் காணப்படுகின்றன.
இந்தக் கோயிலின் வெளிப் பிரகாரத்தில் மண் தரை உள்ளது. சிறிய அளவிலான இரு சந்நிதிகள் வெளிப் பிரகாரத்தில் காணப்படுகின்றன. அவற்றில் சிலைகள் ஏதுமில்லை.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயிலில் இடிபாடுகளை அகற்றி, புதுப்பித்து, பொலிவுபெறச் செய்ய வேண்டுமென அழிச்சூர் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.