

தமிழகத்தில் தீவிரமாகி வரும்கரோனா 2-வது அலை பரவலைதடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. கல்வித் துறையை பொறுத்தவரை, பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு வீட்டுக் கல்வி திட்டத்தின் கீழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் தொடர்ந்து பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகளை கவனித்து வருகின்றனர். கரோனா தடுப்புப் பணியிலும் தன்னார்வ அடிப்படையில் பல ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 45 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் கட்டாயம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் துரிதமாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தடுப்பூசிபோட்டுக்கொள்ள வேண்டும். அதுகுறித்த விவர அறிக்கையை இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். கரோனா தடுப்பு தொடர்பான பணிகளில் மாவட்ட ஆட்சியர், சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து கல்வி அதிகாரிகள் பணிபுரிய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.