

சென்னை தாம்பரம் சானடோரியத்தில் தேசிய சித்த மருத்துவ நிறுவன மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், கரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ளதால், இந்த மருத்துவமனை கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவமனை இயக்குநர்ஆர்.மீனாகுமாரி கூறியதாவது:
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் இந்தமருத்துவமனையை, கரோனாசிகிச்சை மையமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். உள்நோயாளிகள் பிரிவில் கரோனா சிகிச்சைக்கு 50 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன. இந்த கரோனா சிகிச்சை மையம் விரைவில் செயல்படத் தொடங்கும்.
கரோனா பரிசோதனை மூலம்தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர், மிதமான அறிகுறிகள் மற்றும் அறிகுறிகள் இல்லாதவர்கள், வீட்டு தனிமைக்கு அனுப்பப்பட்டவர்களை இங்கு அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்படும். சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிப்பதுடன், கபசுரக் குடிநீர், சித்த மருந்துகள் வழங்கப்படும். அதேபோல, சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி, ஆவிபிடித்தல் முதலியவையும் அளிக்கப்படும்.
கரோனா சிகிச்சை மையம் தொடங்க இருப்பதால், இங்கு செயல்பட்டு வந்த வெளி நோயாளிகள் பிரிவு மே மாதம் 1-ம் தேதியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தவர்கள், வீடுகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.