அரசிடம் இருந்து நிவாரண நிதி பெறும் பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

அரசிடம் இருந்து நிவாரண நிதி பெறும் பயனாளிகள் பட்டியலை வெளியிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழக அரசின் வெள்ள நிவாரண உதவிகளை பெறும் பயனாளிகளின் பட்டியலை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மழை வெள்ளத்தில் சிக்கி முற்றிலும் அழிந்துபோன குடிசை களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி என்பது போதுமானதாக இருக்காது. எனவே, அதை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நெல், மரவள்ளி, பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும் வாழை, கரும்பு, வெற்றிலை போன்ற பயிர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். ரப்பர், சவுக்கு, நாற்றங்கால் போன்றவற்றுக்கும் இழப்புக்கேற்ப நிவாரணம் வழங்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான மீனவர் கள் படகுகளை இழந்துள்ளனர். நெசவாளர்கள் தறியை இழந் துள்ளனர். சிறுகடைகள், மளிகைக் கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதுகுறித்தும் கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மழையால் வேலையிழந்த விவசாயத் தொழிலாளர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

மகளிர் சுயஉதவிக் குழுக் களிடம் கடன் வசூல் செய்வதை 6 மாத காலத்துக்கு ஒத்திவைக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள சமத்துவபுர வீடுகள், தொகுப்பு வீடுகளை அரசே மராமத்து செய்துதர வேண்டும். வங்கிக் கணக்கில்லாத குடும்பங்களுக்கு உயரதிகாரிகள் முன்னிலையில் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். வெள்ள நிவாரணம் பெற்ற பயனாளிகள் பட்டியலை அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in