

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை செய்யப்பட்ட விசாரணை கைதி முத்துமனோ (27) என்பவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள வாகைகுளத்தை சேர்ந்த பாவநாசம் மகன் முத்துமனோ. பணகுடியில் இளைஞருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அவரை கடந்த வாரத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்து வந்தபோது அங்கு ஏற்பட்ட மோதலில் முத்துமனோ அடித்து கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிந்து சிறையிலிருக்கும் 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக சிறையிலுள்ள அலுவலர்கள், காவலர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் சிறைத்துறை அதிகாரிகள், காவலர்களை சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முத்துமனோவின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், வாகைகுளம் கிராமத்தினரும் நேற்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகைகுளத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் பார்வதி சண்முகசாமி, மாவட்ட செயலாளர் முருகன், அமைப்பு செயலாளர் பழனி ஜெயகணேஷ், தமிழ்நாடு விடுதலை களம் தலைவர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் ஜெகன்பாண்டியன், கருஞ்சிறுத்தை இயக்க தலைவர் அதிசயபாண்டியன், மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், ஊர்த்தலைவர் சிதம்பரம், நாட்டாமைகள் செல்லத்துரை, வீரேந்திரசிங், சுபாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.