

திருப்பூர் போக்குவரத்து போலீஸ் வாகனத்தைக் கடத்திய குடிபோதை இளைஞரால், ஊத்துக்குளி அருகே வாகன விபத்து இன்று நடைபெற்றது. வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில் போலீஸார் மீட்டனர்.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் தெற்கு போக்குவரத்துக் காவல் சரகத்துக்குரிய கட்டுப்பாட்டு அறை மற்றும் சோதனைச்சாவடி உள்ளது. இன்று (ஏப். 27) மதியம் தெற்கு போக்குவரத்துக் காவல் ஆய்வாளரின் பொலிரோ ஜீப்பை, திருப்பூர் மாநகர ஆயுதப் படை காவலர் ராஜகுரு என்பவர் நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில், திடீரென அங்கிருந்து பொலிரோ ஜீப் மாயமானது. இதையடுத்து, போக்குவரத்து போலீஸார், மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்குத் தகவல் அளித்துவிட்டு, மாவட்ட போலீஸாருக்கும் தகவல் அளித்தனர். போக்குவரத்துக்கு போலீஸுக்குச் சொந்தமான பொலிரோ ஜீப்பை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தொடர்பாக, மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். இது போலீஸார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள சோதனைச்சாவடிகள் உஷார்படுத்தப்பட்டன. ஊத்துக்குளி அருகே எஸ்.பெரியபாளையம் தாமரைக்கோயில் அருகே வெள்ளியம்பாளையத்தில், திருப்பூர் - ஊத்துக்குளி நோக்கிச் சென்ற போலீஸ் பொலிரோ ஜீப், அவ்வழியாக ஊத்துக்குளியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த லாரி மீது மோதியது. இதில் போலீஸ் பொலிரோ ஜீப் சாலையில் கவிழ்ந்தது. இதில் வாகனம் கடுமையாகச் சேதம் அடைந்தது.
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் ஊத்துக்குளி போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார், சம்பவ இடத்தில் ஜீப்பைக் கடத்தி வந்த நபரைப் பிடித்து விசாரித்தனர். அவர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த விஜய் (23) எனத் தெரியவந்தது. திருப்பூர் கல்லூரிச் சாலையில் சண்முகம் என்பவருக்குச் சொந்தமான எம்.சாண்ட் லாரியை ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், குடிபோதையில் வாகனத்தை அங்கிருந்து கடத்தி, ஊத்துக்குளி அருகே வெள்ளியம்பாளையத்தில் விபத்தை ஏற்படுத்தியதும் தெரியவந்தது. மாநகராட்சி அலுவலகம் அருகே தெற்கு போலீஸ் கட்டுப்பாடு மற்றும் சோதனைச்சாவடி அருகே நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் வாகனத்தில், சாவி இருந்ததால் அதனை அவர் ஓட்டி வந்ததாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விபத்தில் கை, கால்களில் காயம் அடைந்த விஜய்யை, போலீஸார் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, ஊத்துக்குளி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.