கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க அலைமோதும் மக்கள்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க அலைமோதும் மக்கள்
Updated on
1 min read

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்தை அரசே உரிய விலையில் விற்பதால், சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்து மக்கள் திரண்டனர். இதனால் நூற்றுக்கணக்கானோர் மாலை வரை வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலை பரவல் இந்தியாவில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் கரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை, மருந்தில்லை என்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் மடியும் நிலை ஏற்பட்டது.

கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. தமிழகத்தில் தற்போது ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளனர். தினசரி தொற்று எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டுகிறது. உருமாற்றமடைந்த கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சுத் திணறலால் உயிரிழப்பதே அதிகமாக உள்ளது.

இதனால் நாடெங்கும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இன்றைய தேதியில் முக்கியமான இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று ஆக்சிஜன், மற்றொன்று ரெம்டெசிவிர் மருந்து. இது இரண்டும் கள்ளச்சந்தையில் பல மடங்கு விலை வைத்து விற்கப்படுகிறது. தற்போது கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் ரெம்டெசிவிர் மருந்துக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு இல்லை என்றாலும் அதன் மீதான எதிர்பார்ப்பு காரணமாக மருந்துக்காக மக்கள் அலைமோதும் நிலை உள்ளது. இதைப் பயன்படுத்தி இடைத்தரகர்கள், சமூக விரோதிகள் ஒரு டோஸ் மருந்தை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கின்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் கரோனா நோயாளிகளின் உறவினர்கள் தலையில் மருந்து வாங்கும் பொறுப்பை லாவகமாகக் கட்டிவிடுவதால் உயிர் காக்க, கூடுதல் விலைக்கு மக்கள் ரெம்டெசிவிர் மருந்தை வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை அரசு சார்பில் விற்பனை செய்ய மையங்கள் திறக்கப்பட்டன. இதில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.9400க்கு 6 டோஸ் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பக்கத்து மாவட்டங்களிலிலிருந்து குவிந்துள்ளனர். சமூக இடைவெளி இல்லாமல் காலையிலிருந்து வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். உரிய சான்றிதழ், மருத்துவர் பரிந்துரை இருந்தால் மட்டுமே மருந்து கொடுக்கப்படுகிறது.

''நேற்று கொடுத்த டோக்கனுக்கு இன்று மருந்து என சரியான திட்டமிடலும், முன்னேற்பாடும் இல்லாமல் மருந்து விற்பனை நடக்கிறது. கூடுதல் கவுண்டர்கள் போட்டு விற்பனை செய்வதும், மாவட்டங்களில் விற்பனை மையம் திறப்பது மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்கும்'' என்று மருந்து வாங்க வந்த பொதுமக்கள் கூறுகின்றனர்.

ரெம்டெசிவிர் மருந்து கரோனாவுக்கான தீர்வு அல்ல என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது. நோயாளிகளுக்கு ஆக்சிஜனும், நல்ல உணவும்தான் தீர்வு. மருத்துவர் பரிந்துரை செய்தால் மட்டுமே ரெம்டெசிவிரைக் கொடுக்க வேண்டும் என்று சொன்னாலும் மக்கள் அந்த மருந்தின் பின்னே செல்லும் போக்கு குறையவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in