Last Updated : 27 Apr, 2021 05:36 PM

 

Published : 27 Apr 2021 05:36 PM
Last Updated : 27 Apr 2021 05:36 PM

தென்னையில் உருவாகும் சுருள் வெள்ளை ஈக்களை அழிக்க திருப்பத்தூர் விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி 

தென்னை விவசாயிகளுக்கு சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான செயல் விளக்கப் பயிற்சியை வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் வழங்கினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களின் பாதிப்பில் இருந்து மீள்வது குறித்தும், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 10,399 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பருவ நிலை காரணமாக தென்னையில் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் தற்போது பரவலாகக் காணப்படுகிறது.

இதைக் கட்டுப்படுத்த, சுருள் வெள்ளை ஈக்களின் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்ச்சி திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூரில் இன்று (ஏப்.27) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் கலந்து கொண்டு விவசாயிகள் மத்தியில் பேசியதாவது:

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெயில் தாக்கம் தற்போது அதிகரித்து இருந்தாலும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்த பருவ நிலை மாற்றத்தால் சுருள் வெள்ளை ஈக்களின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்துவது அவசியமான ஒன்றாகும். தென்னை இலைகளின் அடிப்பகுதியில் சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும். முட்டைகளை மெழுகு போன்ற சுருள் வெள்ளை நிறத் துகள்கள் மூடியிருக்கும். இளம் குஞ்சுகள் மற்றும் முதிர்ச்சியடைந்த சுருள் வெள்ளை ஈக்கள் சாற்றை உறிஞ்சும் தன்மையுடையவை.

சுருள் வெள்ளை ஈக்களால் வெளியேற்றப்படும் தேன் போன்ற திரவம் கீழ்மட்ட அடுக்கு இலைகளில் மேல்பகுதியில் விழுந்து பரவும். அதுவே நாளடைவில் திரவத்தின் மீது கரும்பூசணமாக வளர்வதால் தென்னை ஓலைகள் கருப்பு நிறமாக மாறிவிடும்.

இதனால் ஒளிச் சேர்க்கை பாதிக்கப்பட்டு மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். பாதிக்கப்பட்ட இலைகள் மீது எறும்புகளை அதிகமாகக் காணமுடியும். சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குததால் மகசூல் அதிக அளவில் பாதிக்கப்படும். பாதிப்படைந்த மரங்களின் இலைகள் கறுப்பு வண்ணத்தில் காய்ந்ததைப் போல் இருக்கும்.

எனவே, இதைக் கட்டுப்படுத்த விளக்குப் பொறிகளை ஒரு ஏக்கருக்கு 2 வீதம் இரவு 7 முதல் 11 மணி வரை ஒளிரச்செய்து இரவில் சுருள் வெள்ளை ஈக்களை அழிக்கலாம். மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களைக் கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில் ஆமணக்கு எண்ணெய்யைத் தடவிய பொறிகளை 5 அடி நீளம் ஒன்றரை அடி அகலத்தில் ஏக்கருக்கு 10 வீதம் 6 அடி உயரத்தில் தென்னந்தோப்புகளில் ஆங்காங்கே கட்டி வைத்தால் சுருள் வெள்ளை ஈக்கள் அழியும்.

தென்னை மரத்தில் 4 அடி உயரத்தில் மஞ்சள் நிற பெயிண்ட் அடித்து அதில் ஆமணக்கு எண்ணெய்யைத் தடவினால் அதில் சுருள் வெள்ளை ஈக்கள் ஒட்டிக்கொண்டு இறந்துவிடும்.

சுருள் வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட மரங்களில் உள்ள கீழ்மட்ட ஓலைகளின் அடிப்பகுதியில் படுமாறு தண்ணீரை விசைத்தெளிப்பான் மூலம் அடித்தால் வெள்ளை ஈக்கள் அழியும்.

தென்னையில் ஏற்படும் கரும்பூசணத்தைக் கட்டுப்படுத்த 1 கிலோ மைதா மாவை 5 லிட்டர் தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்துப் பசையாக்கி, அதனை 20 லிட்டர் தண்ணீரில் ஒட்டும் திரவம் 20 மில்லி சேர்த்து கீழ் இலை அடுக்குகளில் படிந்திருக்கும் கரும்பூசணங்கள் மேல் நன்றாகத் தெளித்தால் 3 முதல் 5 நாட்களில் இலைகளில் படிந்திருக்கும் கரும்பூசணம் வெயிலில் காய்ந்து உதிர்ந்துவிடும்.

அதேபோல, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி வேப்ப எண்ணெய்யுடன் 1 மில்லி திரவம் கலந்து தெளித்தும் பூச்சியைக் கட்டுப்படுத்தலாம். செயற்கை பைரித்திராய்டு மற்றும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், பயிருக்கு நன்மை செய்யும் பூச்சிகளை அழித்துவிடுவதால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

தென்னந்தோப்புகளில் மஞ்சள் நிறப்பூக்கள் பூக்கக்கூடிய சணப்பு, செண்டுமல்லி, காரமணி போன்ற பயிர்களை ஊடுபயிராகச் சாகுபடி செய்வதன் மூலம் நன்மை செய்யும் பூச்சிகளான பொறிவண்டுகள், கண்ணாடி இயற்கை பூச்சிகள், என்கார்சியா குழுவிகள் இயற்கையாகவே பெருகுவதால், சுருள் வெள்ளை ஈக்களை அவை கட்டுப்படுத்தும்.

எனவே, திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தென்னை மகசூலை அதிகரித்து வேளாண்மை மற்றும் வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும்’’.

இவ்வாறு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர்பேசினார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை உதவி இயக்குநர் அப்துல்ரகுமான், வேளாண்மை அலுவலர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x