

கரோனா 2-ம் அலை பரவி வருவதால் கன்னியாகுமரி முதல் சென்னை வரை கல்வி உரிமை விழிப்புணர்வு பேரணி நடத்த அரியலூர் அனிதாவின் சகோதரருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
அரியலூரைச் சேர்ந்த மணிரத்தினம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
நீட் தேர்வால் மருத்துவ சீட் கிடைக்காத விரக்தியில் என் தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதா இறப்புக்கு பிறகு கல்வி உரிமை மற்றும் மருத்துவக் கல்வி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை கல்வி உரிமை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி கோரி ஜன. 17-ல் கன்னியாகுமரி காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தேன். அந்த மனுவை நிராகரித்து காவல் ஆய்வாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்து கன்னியாகுமரி முதல் சென்னை வரை கல்வி உரிமை குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தற்போது கரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருவதால் கல்வி உரிமை சைக்கிள் விழிப்புணர்வு பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது.
கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பிறகு மனுதாரர் பேரணிக்கு அனுமதி கோரி புதிதாக மனு கொடுத்து நிவாரணம் பெறலாம் என்று கூறி மனுவை முடித்து உத்தரவிட்டார்.