

உரிய அனுமதியின்றி முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை தொடர்ந்து இயங்குகிறதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, பண்ருட்டி நகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ராஜேஸ்வரி நகர் குடியிருப்போர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "எங்கள் குடியிருப்புக்கு அருகில் உரிய அனுமதியின்றி முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலையை கார்த்திக் குப்தா எக்ஸ்போர்ட்ஸ் என்ற நிறுவனம் தொடங்கியுள்ளது.
முந்திரி பதப்படுத்தும்போது அதன் ஓட்டில் இருந்து ரசாயன வேதிப்பொருட்கள் எடுக்கப்படுகின்றன. முந்திரியைச் சுடுவதற்காக மரக்கட்டைகள் எரிக்கப்படும்போது கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு பரவுகிறது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, முந்திரி பதப்படுத்தும் ஆலையைக் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திலும், நகராட்சிப் பகுதிகளில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைக்கப்பட வேண்டும் என்பதால், சுற்றுச்சூழல் துறை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த ஆலையை மூடப் பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து ஆலையை மூட மாவட்ட ஆட்சியர் 2019-ல் உத்தரவு பிறப்பித்தார். கரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்ட ஆலை தற்போது முழு அளவில் இயங்கி வருவதால், அனுமதியின்றிச் செயல்படும் அந்த ஆலையை மூட உத்தரவிட வேண்டும். ஆலையை இடிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று (ஏப். 27) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, ஆலையை மூட ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள நிலையில், ஆலை தொடர்ந்து இயங்குகிறதா என அறிக்கை தாக்கல் செய்யும்படி பண்ருட்டி நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.
மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.