

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரனை நியமித்தது செல்லும் எனக் கூறி, அவரது நியமனத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பதவிக்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை நியமித்து, டிசம்பர் 30ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இவரது நியமனத்தை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், “வெளிப்படையான அறிவிப்பு வெளியிடாமல், தகுதியானவர்களின் பெயர்களைப் பரிசீலிக்காமல், சட்ட அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்’’. எனக் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் தேர்வு தொடர்பாக எந்த விளம்பரமும் வெளியிடவில்லை. நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கலந்தாலோசிக்கவில்லை” என வாதிட்டார்.
தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், “பணியில் இருக்கும் நீதிபதிகளை, தலைவராகவோ, உறுப்பினராகவோ நியமிக்க மட்டுமே, தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி நியமிக்க கலந்தாலோசிக்க அவசியமில்லை. தகுதியான நீதிபதிகளின் பட்டியலை உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளரிடம் பெறுவதால், விளம்பரங்கள் வெளியிட வேண்டிய அவசியமில்லை” என்று குறிப்பிட்டார்.
இந்த வாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மனித உரிமை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி உரிய தகுதிகளைப் பெற்றுள்ளதாகவும், முதல்வர் தலைமையில் அமைந்த தேர்வுக்குழு இவரை நியமித்துள்ளதாகவும் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.