

ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தயாரிக்க வேதாந்தா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. 5 பேர் கொண்ட நிபுணர்கள் குழுவுடன், 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவும் இடம் பெற உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் தமிழக அரசு சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் ஆலையைத் திறக்க முடிவு செய்யப்பட்டது.
ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்காக 4 மாதத்துக்கு ஆலையைத் திறக்க தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆனால், வேதாந்தா நிறுவனத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவு உள்ளது. ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா நிறுவனம் பயன்படுத்த வேண்டும், தற்போதைய அனுமதியைக் காரணமாகக் காட்டி தாமிர உற்பத்திக்கு அனுமதி கோரக் கூடாது. அரசின் கண்காணிப்புக் குழுவின் மேற்பார்வையில்தான் ஆலை இயங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், “ஆலை நிர்வாகம் மற்றும் இயக்கம் அரசின் கண்காணிப்பின் கீழ் இருக்கலாம். அதே வேளையில் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனைப் பிற மாநிலங்களுக்கு விநியோகிப்பதைத் தடுக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
நீதிபதி ரவீந்திர பட், “உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை மத்திய அரசு மூலம் ஒதுக்கீடு செய்வதே முறை என ஏற்கெனவே ஒரு உத்தரவு உள்ளதே?’’ எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசுத் தரப்பு, “ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றே கோருகிறோம்” என்று தெரிவித்தது.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதத்தில், “வேதாந்தா நிறுவனத்துக்கும், தமிழக அரசுக்குமான பிரச்சினை குறித்து எங்களுக்குப் பிரச்சினையில்லை. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் மத்திய அரசின் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் மற்ற மாநிலங்களில் எவ்வளவு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதைக் கணக்கிட்டு அதனடிப்படையில் மத்திய அரசு மட்டும்தான் அதனைப் பிரித்துக் கொடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.
வேதாந்தா நிறுவனம் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, “ஆக்சிஜன் மட்டுமே தயாரிப்போம். அதற்காக மாநில அரசு மின்சாரம் வழங்க வேண்டும். அதேவேளையில் கண்காணிப்பு மேற்பார்வைக் குழுவில் இடம் பெற்றுள்ள ஆட்சியர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், குழுவில் இடம்பெறும் அங்குள்ள உள்ளூர் மக்கள் சார்பு பிரதிநிதிகள், என்.ஜி.ஓ (NGO) பிரதிநிதிகளை எதிர்க்கிறோம்” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், “மேற்பார்வைக் குழு என்பது அரசு அதிகாரிகள், நிபுணர்களைக் கொண்டதாக அமையுங்கள். வேண்டுமெனில் அந்தக் குழு அப்பகுதி மக்களிடமும், சுற்றுச்சூழல் ஆர்வலரிடமும் இதுகுறித்துப் பேசட்டுமே? மேலும் அங்குள்ள கடினமான, சூழலைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் அளித்த பதிலில், “ஆலை அமைந்துள்ள பகுதியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. எனவே, சட்டம்- ஒழுங்கு பிரச்சினை வராமலிருக்கவே உள்ளூர் மக்கள் சார்பு பிரதிநிதி மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்களைக் குழுவில் சேர்த்துள்ளோம்” என்று தெரிவித்தார்.
நீதிபதி சந்திர சூட், “ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை எவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
வேதாந்தா நிறுவனம் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, “அனுமதியளித்த 10 நாட்களுக்குள் உற்பத்தி தொடங்கப்படும். 200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். அதனை மாநில அரசுக்கு வழங்குவதா? அல்லது மத்திய அரசுக்கு வழங்குவதா? என்பதைக் கூறினால் அவர்களிடம் வழங்கத் தயார்” எனத் தெரிவித்தார்.
ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வேஸ் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது. இந்த நிறுவனம் மிகவும் மோசமான ஒரு நிறுவனம். இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், ''தற்போது ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பாக மட்டுமே விசாரிக்கிறோம், பிற விவகாரங்களை அல்ல” எனத் தெரிவித்தார். பின்னர், ''ஆலையில் மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் தயாரிக்க முடியுமா என நிபுணர் குழுவிடம் விசாரித்தீர்களா?'' எனத் தமிழக அரசுத் தரப்பை நோக்கி கேள்வி எழுப்பினார்
தமிழக அரசுத் தரப்பில், “தற்போதைய நிலையில் உடனடியாக 35 மெட்ரிக் டன் மருத்துவப் பயன்பாடு ஆக்சிஜன் தயாரிக்க முடியும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி ரவீந்திர பட், “ஆலை இயக்கப் பணிக்கு எத்தனை ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள்?’’ எனக் கேள்வி எழுப்பினார்.
வேதாந்தா நிறுவனம் தரப்பில், ''3000 பேர் தேவை'' என பதிலளித்தனர்.
நீதிபதிகள், “ஆக்சிஜன் தயாரிப்புப் பணிக்கு மட்டும் எத்தனை பேர் தேவை எனக் கூறுங்கள்” என்று கேட்டனர்.
வேதாந்தா நிறுவனம், “250 ஊழியர்கள் தேவைப்படுவார்கள்” என்று தெரிவித்தது.
நீதிபதி சந்திரசூட், ”கண்காணிப்புக் குழுவில் சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர்கள் இடம்பெற வேண்டும்” என்று தெரிவித்தார்.
தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ''ஆலைப்பகுதி மக்கள் சார்பு பிரதிநிதிக் குழுவில் இடம்பெற வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு'' எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சிலர் உள்நோக்கம் கொண்டு செயல்படுவதால் உள்ளூர்வாசிகள் யாரையும் குழுவில் இடம்பெற அனுமதிக்கக் கூடாது” என ஆட்சேபம் தெரிவித்தார்.
தமிழக அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “உள்ளூர் வாசிகள் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு ஆதரவு அளிப்பதை எதிர்க்கிறோம்” என ஆட்சேபம் தெரிவித்தார்.
நீதிபதி சந்திரசூட், ''தற்போது நாடு இக்கட்டான சூழலில் (Crisis) உள்ளது, இந்த தேசிய இடரில் (National Calamity) தற்போதைய நேரத்தில் அரசியல் வேண்டாம். நாட்டின் நலனுக்குத் துணை நிற்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
ஆலையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பு மூத்த வழக்கறிஞர் காலின் கோன்சால்வேஸ், “எங்களுக்கும் பிராணவாயு தேவையானதே. நாங்கள் தேச விரோதிகள் அல்ல” எனத் தெரிவித்தார்.
வேதாந்தா நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, “நீங்கள் தேச விரோதிகள்தான்” எனத் தெரிவித்தார்.
நீதிபதி சந்திரசூட், “இந்தப் பேச்சை இத்தோடு விடுங்கள்” எனத் தெரிவித்தார்
நீதிபதிகள், ''பாகுபாடற்ற வகையில் கண்காணிப்புக் குழு அமைக்கிறோம். அதில் NEERI யால் பரிந்துரைக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 3 நிபுணர்கள் இடம்பெற வேண்டும். அதில் இரண்டு பேரை ஆலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பான வழக்கறிஞர் கோன்சால்வேஸ் தரப்பில் 2 பேரைப் பரிந்துரைக்கலாம். அதைத் தவிர 5 நிபுணர்கள், குழுவில் இடம்பெற வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “உற்பத்தி செய்யும் ஆக்சிஜனைத் தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் எனக் கோருவது ஏற்புடையது அல்ல. அதை மத்திய அரசிடம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ''ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன் மத்திய அரசு தொகுப்பிற்குக் கொடுப்பதுதான் சரியாக இருக்கும். அதுதான் விதிமுறையும் கூட'' எனத் தெரிவித்தார்.
தமிழக அரசுத் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “அதை ஏற்கிறோம். ஆனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் மருத்துவ சிகிச்சைக்கான ஆக்சிஜனில் முன்னுரிமை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “அத்தகைய முன்னுரிமையை வழங்க முடியாது” என ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
* ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பதற்காக இயங்க அனுமதியளிக்கிறோம். இந்த உத்தரவு தற்போதைய தேசிய சூழலைக் கருத்தில் கொண்டே பிறப்பிக்கப்பட்டது.
* மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி அளித்த தற்போதைய இந்த உத்தரவு வேதாந்தா நிறுவனத்துக்கு வரும் காலத்தில் ஆதரவாக அமையாது.
*இந்த உத்தரவைக் கொண்டு எந்த வகையிலும் வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட்டில் தாமிர உற்பத்தி செய்யவோ, அதற்காக ஆலையை இயக்கவோ அனுமதி இல்லை.
*ஆக்சிஜன் உற்பத்திக்காக ஆலைக்குள் நுழையும் நிபுணத்துவம் வாய்ந்த ஊழியர்கள், non technical ஊழியர்கள் ஆகியோரின் பட்டியலை வேதாந்தா நிறுவனம் அரசிடம் அளித்து ஒப்புதல் பெற வேண்டும்.
* ஆலை இயக்கம் தொடர்பான கண்காணிப்பு நிபுணர் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர்கள் 3 பேர் இடம்பெற வேண்டும். அதில் இரண்டு பேரை ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தரப்பினர் 48 மணி நேரத்துக்குள் பரிந்துரைக்க வேண்டும். அவ்வாறு பரிந்துரைக்கத் தவறும் பட்சத்தில் தமிழக அரசு இரு நிபுணர்களைப் பரிந்துரை செய்ய வேண்டும்.
* ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழகத்துக்குத் தர வேண்டும் அல்லது முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசு கோருகிறது. ஆனால், தமிழகத்தில் தற்போது மருத்துவப் பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் என்பது தேவைக்கேற்ப உள்ளது. எனவே, வரும் காலத்தில் ஒருவேளை பற்றாக்குறையோ அல்லது தேவை அதிகரித்தாலோ அப்போது உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தைத் தமிழக அரசு அணுகலாம்”.
இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.