

கரோனா தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என, கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று (ஏப். 27) வெளியிட்ட அறிக்கை:
"கரோனா கொடுந்தொற்றின் இரண்டாம் அலை நாட்டையே மிகப் பெரிய அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் ஆளாக்கி வருகிறது! மக்களின் அச்சத்தை அகற்றி, புதிய நம்பிக்கையை ஊட்ட வேண்டிய மத்திய அரசு, கடைசியில் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில், மாநில அரசுகள் தலையில் போட, இந்த இக்கட்டான தருணத்தில் நினைப்பது எவ்வகையில் நியாயம்?
மக்களைக் குழப்பும் அறிவிப்புகள்
தடுப்பூசிகள் போடப்படுவது பற்றி தெளிவான, முரண்படாத அறிவிப்புகள் வருவதற்கு பதிலாக, மக்களைக் குழப்பும் அறிவிப்புகள் வருவது மிகவும் வேதனையானது!
18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களை கரோனா தாக்குவது 22 விழுக்காடு என்ற அளவில் புள்ளிவிவரங்கள் வந்துள்ள நிலையில், மே முதல் தேதியிலிருந்து அவர்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்த மத்திய அரசு அறிவித்து, 'அவர்கள் தனியார் மருத்துவமனைகள் மூலமே போட்டுக் கொள்வர்' என்றும், அதற்குக் கட்டண நிர்ணயம் ஏற்கெனவே இருந்ததிலும் அதிகமான கட்டணத்தை நிர்ணயிக்க தனியார் உற்பத்தி மருந்து நிறுவனங்களை அனுமதித்தது எவ்வகையில் சரியானது?
மருந்துகளை மத்திய அரசே கொள்முதல் செய்ய வேண்டும்
இந்த நெருக்கடியில் மக்களைக் குழப்பாமல், வஞ்சிக்காமல் மத்திய அரசு அதன் நிதியிலிருந்து மருந்துகளைக் கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு அவரவர்கள் தேவைக்கு ஏற்ப அனுப்பி, அனைத்து 18 வயது முதல் 44 வயதுடையோருக்கும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டத்தைச் செயல்படுத்த உடனடியாக முன்வர வேண்டும்.
மாநில அரசுகளின் நிதி நிலைமை எப்போதும் பற்றாக்குறையாக உள்ள நிலையில், பிரதமர் நிவாரண நிதி, தேசிய பேரிடர் நிதி, ஏற்கெனவே மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடி நிதி, இவற்றைச் செலவழித்து மக்களைக் கொடுந்தொற்றிலிருந்து காப்பாற்ற அவசரமாக முன்வர வேண்டும்.
தனியார் அமைப்புகள் விலையை நிர்ணயிக்க அனுமதிப்பதா?
விலை நிர்ணயத்தை தனியார் அமைப்புகள் விருப்பம்போல் முடிவு செய்ய அனுமதிப்பது நியாயமல்ல. மத்திய அரசுக்கு ஒரு விலை; மாநில அரசுக்கு ஒரு விலை என்ற பல்வேறு அளவுகோல்களை வைப்பது, எரியும் வீட்டில் பிடுங்கியவரை லாபம் என்ற நிலைக்கே தள்ளிவிடும் மோசமான நிலையேயாகும்! முதல் பணியாக, தடுப்பூசி விநியோகம் சம்பந்தமாக சீரான முறையில் அமைந்த அறிவிப்புகள் மத்திய அரசால் செய்யப்பட வேண்டும்.
மாநில முதல்வர்களிடம் கருத்து கேட்கப்பட வேண்டும்
மாநில முதல்வர்களின் கருத்தை அறிந்து இதனை ஒருமித்து முடிவு செய்தால், குழப்பமும் குளறுபடிகளும் ஏற்படாது.
தடுப்பூசி போடுவதில் முன்னுரிமைப் பட்டியலில் உள்ளவர்களுக்கே இன்னும் முழுமையாக முதல் டோஸ் ஊசி போய்ச் சேரவில்லை. எனவே, இளைஞர்களுக்கும் என்பதனையும் ஒருங்கிணைத்து சரியான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தி, அனைவருக்கும் தடுப்பூசி என்பதை ஓர் இலக்காக வைத்து முன்னுரிமையை ஓர் இயக்கமாக ஆக்கிடல் அவசர அவசியமாகும்.
மாநிலங்களுக்கான ஒதுக்கீடு மத்திய அரசின் விருப்பு, வெறுப்பு, அல்லது ஏதோ ஒரு வகை கணிப்புக்கு உட்படுத்தி நடத்தப்படாமல், அறிவியல் அணுகுமுறைபோல் துல்லியமான தேவைகளையும் பாதிப்புகளையும் முன்வைத்து, மாநில மருத்துவ நிபுணர் குழுவினரின் கருத்துக்கிணங்க நிர்ணயம் செய்வதுடன் கட்சி, சாதி, மதக் கண்ணோட்டத்திற்கு இடம் தராமல், தடுப்பூசி விநியோகம், முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி காத்தல், மற்றைய தடுப்பு உத்திகள் முதலியவற்றைப் பின்பற்ற மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய தொண்டு அமைப்பை உருவாக்கி முறைப்படுத்துவது அவசியமாகும்.
இதனை ஊருக்கு ஊர் அமைத்துச் செயல்பட்டால், பீதி அடையாமல் நிலைமையைச் சமாளித்துக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும்.
தன்னம்பிக்கை அவசியம்
தன்னம்பிக்கையை ஒரு போதும் இழக்கக் கூடாது. இந்த அலை ஓய்வதற்கு மே மாதம் இறுதி வரையும் ஆகலாம்; மேலும் சில வாரங்கள் ஆனாலும் ஆகலாம் என்பது மருத்துவ வல்லுநர்கள் கருத்தாகும்.
'முகக்கவசம் இல்லாமல் ஒருவர் இருந்தால் அவர் மூலம் மற்றவருக்குப் பரவ 90 விழுக்காடு வாய்ப்பு உண்டு; ஆனால், முகக்கவசம் அணிந்திருந்தால் அது வெறும் 1.5 விழுக்காடு வாய்ப்பாக குறைகிறது' என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதுவரை தடுப்பூசியை சுகாதாரப் பணியாளர் 87 விழுக்காட்டினர் முதல் டோஸ் மருந்தைப் போட்டுக் கொண்டனர். இரண்டாவது டோஸை அனைவரும் செலுத்திக் கொண்டார்களா என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு, அவர்களையும் பாதுகாத்தல் முதல் கடமையாகும்.
பீதியினால் மருந்து பதுக்கல், அவசரத்தைப் பயன்படுத்தி கொள்ளை லாபம் அடித்தல் இவை மிகப் பெரிய சமூக விரோதச் செயல்கள். இவை எங்கே தலைதூக்கினாலும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
டெல்லி துயரம்
தலைநகர் டெல்லியை நினைத்தால் நெஞ்சு வெடிப்பதுபோல துயரத்தின் உச்சமாகிறது! மக்கள் பதறுவதும், கதறுவதும், ஆக்சிஜன் இல்லாமல் தவிக்கும் நிலையில், மருத்துவர்களே கூட கதறி கண்ணீர் விட்டு, கடமையாற்றுபவர்கள் கூறுவதைவிட சோகப்படலம் வேறு தேவையா?
தேவை ஆக்கபூர்வ உதவிகள்
என்றாலும், இந்தக் காலகட்டத்தில் ஆக்கபூர்வ உதவிகளே அவசரத் தேவைகள், முரண்பட்ட நிலைப்பாடுகள், விமர்சனங்களை எதிர்கொள்வதிலிருந்து தப்பிக்க, உண்மைகளை களப்பலியாக்கி விடக் கூடாது! எதையும் தாங்கும் இதயம் என்றாலும் மக்களுக்குத் தன்னம்பிக்கையும், நன்னம்பிக்கையும் ஊட்டி, அவர்கள் எந்த சோதனைகளையும் வென்றெடுக்கும் துணிச்சலை அளிப்போமாக!".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.