Published : 27 Apr 2021 06:41 PM
Last Updated : 27 Apr 2021 06:41 PM

அரசுப் பேருந்துகளுக்கெனத் தனி இணையதளம்: மாணவரின் நல்முயற்சி!

தமிழ் வண்டி இணையதளத்தின் முகப்பு, உள்படம்: அருணாச்சலம்

தனியார் பேருந்துகள் குறித்த தகவல்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் சூழலில், தனியொருவராகத் தரவுகளைத் திரட்டி, அரசுப் பேருந்துகள் குறித்த தகவல்களுக்காகத் தனி இணையதளத்தையே உருவாக்கியுள்ளார் அருணாச்சலம் என்னும் எம்பிஏ மாணவர்.

தமிழ் வண்டி.காம் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ள அருணாச்சலம், அரசுப் பேருந்துகளின் வழித்தடங்கள், நிறுத்தங்கள், பேருந்துகள் புறப்படும் நேரம், பயண அட்டவணை ஆகியவற்றை அதில் பதிவிட்டு, தொடர்ந்து தகவல்களைப் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார். மாநிலம் முழுவதும் இயங்கும் 275-க்கும் மேற்பட்ட பேருந்து விவரங்கள் இந்த இணையதளத்தில் உள்ளன.

திருவாரூர் மாவட்டம், கொட்டாரக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம், அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 2017-ல் 12-ம் வகுப்பு முடித்ததும் தனியாகப் பயணமொன்றை மேற்கொண்டார். அங்கே பேருந்து நேரத்தைச் சரிவர அறியாமல் சென்னை செல்லும் பேருந்தைத் தவறவிட்டார். இதனால் அங்கு சென்று சிஏ நுழைவுத் தேர்வை எழுதும் வாய்ப்பையும் இழந்தார். தனக்கு ஏற்பட்ட நிலை மற்றவர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் அரசுப் பேருந்துகள் குறித்த விவரங்கள் அதுவரை யாராலும் தொகுக்கப்படவில்லை என்பதாலும் தனி இணையதளத்தை உருவாக்க முடிவெடுத்தார்.

கோயம்பேடு பேருந்து நிலைய விவரம்

அதற்குப் பிறகு நடந்தவற்றை அருணாச்சலமே சொல்கிறார்.

''அப்போதில் இருந்து முழுக்க முழுக்க 2 ஆண்டுகளைத் தகவல்களைச் சேகரிப்பதில் மட்டுமே செலவிட்டேன். இதற்காக பி.காம். படிப்பில் சேர்ந்து, வார இறுதி நாட்களில் தமிழகம் முழுக்க ஒவ்வொரு பேருந்து நிலையத்துக்கும் நேரடியாகச் சென்றேன்.

நிறைய ஊர் பேருந்து நிலையங்களில் பேருந்து நேர அட்டவணைக்கான விவரங்கள் இருக்காது. பேருந்து நிலையத்துக்குள் சென்று கேட்பேன். யாரோ ஒரு தனி நபர், சின்ன பையன் தகவல்களைக் கேட்டால் எப்படிச் சொல்வது என்று அங்கிருந்த அதிகாரிகள் தயக்கம் காட்டினர். அதனால் பிறகு நேரம் கிடைக்கும்போது அதே இடங்களுக்குச் சென்று பார்ப்பேன். அட்டவணை ஒட்டப்பட்டிருக்கும் நேரத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்வேன். இதற்காக மதுரை பேருந்து நிலையத்துக்கு மட்டும் 8 முறை சென்றுள்ளேன்.

தமிழகம் முழுவதும் பெரும்பான்மையான நகரங்கள் அனைத்துக்கும் சொந்தச் செலவில் பயணித்திருக்கிறேன். இதுவரை 400க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்களுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்டி, 275-க்கும் மேற்பட்ட பேருந்து நிலையங்களின் கால அட்டவணை விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளேன். ஒருசில பேருந்து நிலையங்களில் தகவல் கிடைக்கவில்லை என்றால் அங்கிருந்து இரவில் 8 மணி நேரம் பயணிக்கும் வகையில் திட்டமிட்டு, இன்னொரு நகரத்துக்குச் சென்று அங்குள்ள பேருந்து விவரங்களைச் சேகரித்துக் கொள்வேன். பிறகு வீடு திரும்புவேன்'' என்கிறார் அருணாச்சலம்.

தமிழ் வண்டி இணையதளத்தில் பேருந்து கால அட்டவணை தவிர்த்து பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டு, அதில் தினசரி பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை, பேருந்துகளின் எண்ணிக்கை, அமைப்பு, பேருந்து நிலையங்களின் அருகே உள்ள உணவகங்கள், ஏடிஎம்கள், கழிப்பறைகள் மற்றும் அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள், அவற்றின் தொலைபேசி எண்கள் ஆகிய தகவல்களும் உள்ளன.

மதுரை பேருந்து நிலையத்தில் உள்ள பிற வசதிகள்

தமிழ்நாடு முழுவதும் இயங்கும் அரசுப் பேருந்துகள் மட்டுமல்லாமல், சென்னை, திருச்சி ஆகிய பகுதிகளில் இருந்து பெங்களூரு, மதுரையில் இருந்து திருப்பதி, திருவனந்தபுரம் டூ சென்னை என அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து செல்லும் பேருந்து விவரங்களையும் அருண் பட்டியலிட்டு, பயணிகளின் பயணத்தை இலகுவாக்கி உள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக (டிஎன்எஸ்டிசி) இணையதளத்துக்கும் தமிழ் வண்டி இணையதளத்துக்கும் என்ன வேறுபாடு என்று அவரிடம் கேட்டதற்கு, ''டிஎன்எஸ்டிசியில் நீண்ட தூரம் செல்லும் அரசுப் பேருந்துகளின் விவரம் மட்டுமே உள்ளது. அதில் சுமார் 1,500 அரசுப் பேருந்துகள், 200 டிஎன்எஸ்டிசி பேருந்துகள் குறித்து அறிந்துகொள்ளலாம். தமிழ் வண்டி இணையதளத்தில் சுமார் 10,000 பேருந்து நேர அட்டவணை விவரங்கள் உள்ளன.

அதேபோல இணையதளதைப் பார்வையிடுபவர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலும், அவர்களின் கருத்துகளைப் பகிரவும் தனியாக இடம் இருக்கிறது. அதைப் பார்க்கும் ஏராளமான பயணிகள் பேருந்து விவரங்கள், குறைந்த தூரத்தில் எப்படிப் பயணிக்கலாம் என்பது குறித்த சந்தேகங்களை இணையத்திலேயே கேட்கிறார்கள். தினந்தோறும் எம்பிஏ வகுப்புகளை முடித்துவிட்டு, அவற்றுக்குப் பதிலளித்துவிட்டுத்தான் பிற வேலைகளுக்குச் செல்வேன்.

பேருந்துப் பயணம் குறித்து அறிந்துகொள்ளும் வசதி

தற்போது கரோனா காரணமாகத் தமிழக அரசின் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், மாற்றம் செய்யப்பட்ட அரசுப் பேருந்துகளின் நேர அட்டவணையையும் பதிவேற்றி உள்ளேன்'' என்கிறார் அருணாச்சலம்.

இணையதளம் தவிர்த்து தமிழ் வண்டிக்கெனத் தனிச் செயலியை உருவாக்கவும் அருணாச்சலம் திட்டமிட்டுள்ளார். இவற்றால் அனைவருக்கும் அரசுப் பேருந்து பயணம் இனி எளிதாகி, இனிதாகும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் மாணவர் அருணாச்சலம்.

இணையதள முகவரி: https://www.tamilvandi.com/

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x