

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஓய்வே இன்றி கரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசு தரப்பில் ஊக்குவிப்பு, ஊக்கத் தொகை வழங்காததால் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் சோர்வடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு கரோனா பரவியபோது மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப் பட்டோருக்குத் தொந்தரவுகளுக்கு தகுந்தவாறு மருந்து வழங்கியும், ஊட்டச் சத்துகளை பரிந்துரை செய்தும் காப்பாற்றினர். தமிழகத்தில் கரோனா முதல் அலையின்போது தனியார் மருத்துவ மனைகள் அனைத்தும் செயல் படவில்லை.
அதனால் கரோனாவுக்கு மட்டுமின்றி மற்ற நோயாளிகளுக்கும் அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டது. கரோனா ஊரடங்கால் ஒட்டுமொத்த மக்களும் வீட்டில் முடங்கினர். ஆனால் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் குடும்பத்தைப் பிரிந்து 2 வாரங்கள் வீட்டுக்கே செல்லாமல் கரோனா வார்டுகளில் பணிபுரிந்தனர்.
முகக்கவசம், பிபி கிட், கையுறை போன்ற காற்றே புகாத கவச ஆடைகளை தொடர்ந்து 10 மணி நேரத்துக்கும் மேலாக அணிந்து பணிபுரிந்தனர். அவர்களில் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. சிலர் இறக்கவும் செய்தனர். இருப்பினும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கரோனா சிகிச்சைப் பணியில் இருந்து பின்வாங்காமல் போராடி நோயாளிகளை குணப்படுத்தினர். இதற்காக இவர்களைப் பொதுமக்கள் பாராட்டினர்.
தமிழக அரசும், கரோனா சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் தற்போது வரை சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. மேலும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் ஊதிய முரண்பாடு கோரிக்கைகளையும் அரசு இதுவரை சரி செய்யவில்லை.
தற்போதும் கரோனா வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஓய்வே இல்லாமல் சிகிச்சை அளித்து வருவதால் அவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் மிகவும் சோர்வடைந்துள்ளனர். மேலும் முன்பிருந்த ஆர்வம் அவர்களிடம் இல்லை.
இது குறித்து அரசு மருத்துவர்கள் கூறி யதாவது:
கடந்த ஆண்டு 2 வாரம் கரோனா வார்டு பணி பார்த்தால், அடுத்த 2 வாரம் அவர்களுக்கு உயர்தர ஹோட்டல்களில் தங்கும் வசதி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான சாப்பாடுடன் ஓய்வு வழங்கப்பட்டது. எங்கள் மீதான அந்த அக்கறையால் அரசு மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஒரு வாரம் மட்டுமே ஓய்வு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுபோல் தங்குமிடம், சாப்பாடு வழங்கப் படுவதில்லை. மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் ஒரு மாத சிறப்பு ஊக்கத் தொகையும் வழங்கப் படவில்லை.
மனதளவில் சோர்வடைந்தாலும் நோயாளிகளுக்கு தற்போது வரை சிறப்பான சிகிச்சை அளித்து அவர்களை குணப்படுத்தி வருகிறோம் என்றனர்.
இதுகுறித்து மதுரை அரசு மருத்து வமனை டீன் சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் ஹோட்டல்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு சாப்பாடு வசதி செய்யவும் தற்போதுதான் நிதி வந்துள்ளது. அதனால் கடந்த ஆண்டைப்போல் தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு வசதிகளை செய்து கொடுக்கத் தொடங்கிவிட்டோம்’’ என்றார்.