Published : 15 Jun 2014 01:00 PM
Last Updated : 15 Jun 2014 01:00 PM

திமுக நிர்வாக அமைப்பை 70 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்- கருணாநிதியிடம் 6 பேர் குழு 150 பக்க அறிக்கை தாக்கல்

திமுகவில் மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கத்தை குறைத்து, கட்சியை வலுப்படுத்த தற்போதுள்ள 34 மாவட்டங்களை 70 மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்தவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கக் கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் 6 பேர் கொண்ட சீரமைப்புக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 34 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர். கன்னியாகுமரி, தர்மபுரி தொகுதிகளில் டெபாசிட் இழந்தனர். தேர்தல் தோல்விக்கு உள்கட்சிப் பூசல், அழகிரி - ஸ்டாலின் சகோதர யுத்தம், வேட்பாளர்கள் தேர்வில் குளறுபடி, மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கம் போன்றவையே காரணம் என கட்சியின் விசுவாசிகள் பலர் தலைமைக்கு தொடர்ந்து புகார் அனுப்பினர்.

இந்நிலையில், கட்சியில் மாற்றம் கொண்டுவரவும் 2016 சட்டசபைத் தேர்தலுக்குள்

கட்சியை பலப்படுத்தவும் திமுக தலைவர் கருணாநிதி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். மாவட்ட ரீதியாக கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமைக்கு பரிந்துரைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கலசப்பாக்கம் திருவேங்கடம், ஒரத்தநாடு ராஜமாணிக்கம், திருத்துறைப்பூண்டி டி.எஸ்.கல்யாணசுந்தரம், ஈரோடு எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இதில் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆகியோருடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். அப்போது கட்சியில் எந்தவிதமான மாற்றங்கள் வேண்டும். மாவட்டச் செயலாளர்களுக்கான பிரச்சினைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை விரைந்து அளிக்குமாறு குழுவிடம் அறிவுறுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கத்தால் ஏற்பட்டுள்ள உள்கட்சிப் பிரச்சினைகள், விசுவாசிகள் புறக்கணிக்கப்பட்டது குறித்து திமுக தலைமைக்கு வந்த புகார்களையும் ஆய்வு செய்யுமாறு குழுவினருக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கட்சியில் மாவட்டங்களை பிரிப்பது மற்றும் மாவட்டச் செயலாளர்களை மாற்றியமைப்பது குறித்த 150 பக்க அறிக்கையை, கருணாநிதியிடம் 6 பேர் குழு சனிக்கிழமை அளித்தது. அதில், ‘திமுக-வில் தற்போது இருக்கும் 34 மாவட்டங்களை 70 மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும். சென்னையை 6 அல்லது 7 மாவட்டங்களாகப் பிரிக்கலாம்.

மாவட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்களுக்கான தேர்தலை விரைந்து நடத்த வேண்டும். கட்சிக்கு துரோகம் இழைத்தவர்களுக்கு மீண்டும் பதவி தரக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டச் செயலாளர்கள் சரியாகப் பணியாற்றவில்லை. எந்த தொகுதி வேட்பாளர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை. எந்தெந்த மாவட்டங்களில் கோஷ்டிகளாகப் பிரிந்து செயல்பட்டனர். அழகிரியின் ஆதிக்கம் உள்ள மாவட்டங்களில் நடந்தது என்ன என்பது போன்ற விவரங்களும் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த அறிக்கையின் அடிப்படையில், கட்சியில் பல மாற்றங்கள் இருக்கும் என்றும் அதுபற்றிய அறிவிப்பை கருணாநிதி விரைவில் வெளியிடுவார் என்றும் தெரிகிறது. அதற்கு முன்பாக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி கட்சியில் நிர்வாக ரீதியாக எடுக்கவுள்ள மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலி கிளைகளுக்கு மறு தேர்தல்?

திமுக-வில் கிராம, பேரூர் அளவில் வார்டு, வட்ட, கிளை நிர்வாகங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. ஒரு தரப்பினர் அதிக அளவில் தங்களது ஆதரவாளர்கள் மூலம், போலி கிளைகளை உருவாக்கி தேர்தலில் முறைகேடு செய்துவிட்டதாக புகார் எழுந்தது. இதே புகாரைத்தான், தென்மண்டல முன்னாள் அமைப்பு செயலாளர் மு.க.அழகிரியும் கூறியிருந்தார். எனவே, போலி கிளைகளுக்கு மறுதேர்தல் நடத்தாமல் விட்டால் மாவட்ட, ஒன்றியத் தேர்தலிலும் ஒரு தரப்பினர் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கட்சியின் விசுவாசிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x