

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சியடைந்து, கிலோ ரூ.29 ஆக குறைந்துள்ளது. ஊரடங்கு நேரத்தில் தென்னை விவசாயிகள் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வேளாண் நிலப்பரப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவைகளில் தென்னை விவசாயமே நடந்து வருகிறது. ஒக்கி புயலுக்கு பின்னர் தென்னை விவசாயிகள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வந்தனர். ஒக்கி புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த வறட்சியால் 5 சதவீதம் தென்னை மரங்கள் அழிந்தன. கடந்த ஆண்டு பருவமழை மற்றும் தட்பவெப்ப சூழ்நிலை சாதகமாக இருந்ததால் தென்னையில் ஓரளவு மகசூல் கிடைத்து, விவசாயிகள் லாபம் ஈட்டினர். ஒரு கிலோ தேங்காய் ரூ.47 வரை கொள்முதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பொள்ளாச்சி, தாராபுரம் பகுதிகளில் இருந்து தேங்காய் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டன. இதனால் கடந்த ஒரு மாதமாக தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. கிலோ ரூ.35 ஆக குறைந்த தேங்காய் விலை, தற்போது ரூ.29-க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. தேங்காய் மகசூலும் குறைந்து வரும் நிலையில், தென்னை ஒன்றுக்கு சராசரியாக 10 தேங்காய் கிடைப்பதே அரிதாக உள்ளது. இதனால் விவசாயிகள் மீண்டும் பாதிப்பைச் சந்திக்கின்றனர்.
விவசாயிகள் கவலை
இதுகுறித்து ஈத்தாமொழியைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் கூறும்போது, “தொடர்ந்து 3 ஆண்டுகளாக நஷ்டத்தையே சந்தித்து வந்த தென்னை விவசாயிகளுக்கு, 2020-ம் ஆண்டு ஓரளவு விலை கிடைத்தது. தற்போது மீண்டும் கிலோ ரூ.30-க்கு கீழாக கொள்முதல் செய்யப்படுவது வருத்தம் அளிக்கிறது.
கரோனா ஊரடங்கு நேரத்தில் விலை வீழ்ச்சி என்பது தென்னை விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு. அரசு நியாயமான கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்றார்.