

இதுதான் கடந்த 6 மாதங்களாகவே நகரத்து சாலைகளின் கதிமோட்சமாக இருக்கிறது என அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் உடுமலை மக்கள். குறிப்பாக அரசு மருத்துவ மனை, வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்ற வளாகம், பள்ளிக்கூடம் உள்ள சாலையில் சாக்கடைக் குள்ளேயே மரக்கிளைகள் வெட்டிப் போடப்பட்டு கழிவுநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா உள்ளிட்ட நோய் பரப்பு் கொசுக்கள் பெருக வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூருக்கு அடுத்தபடியான முக்கிய நகரமாக விளங்குவது உடுமலை. பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட ரோடுகள் ஒரு பக்கம் மூடியும் மூடாமலும் இருக்கிறது. மறுபுறம் சாலை குண்டும், குழியுமாக இருக்கிறது. தொடர் மழை தற்போது உடுமலை நகர சாலைகளை சேறும் சகதியுமாக மாற்றிவிட்டது.
போக்குவரத்து நெரிசல் உள்ள தளி சாலை, பழநி சாலை, பல்லடம் சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள், பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள வஉசி வீதி, சத்திரம் வீதி, கச்சேரி வீதி, பசுபதி வீதி, கல்பனா சாலை உள்ளிட்டவற்றில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
கச்சேரி வீதியில் அரசு மருத்துவமனை, அது சார்ந்த தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட 30 படுக்கைகள் கொண்ட மகப்பேறியில் பிரிவு, நீதிமன்ற வளாகம், வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி நடுநிலைப்பள்ளி, உடுமலை நில வருவாய் அலுவலர் அலுவலகம், நூலகம் என முக்கிய மையங்களின் கேந்திரங்கள் இயங்குகின்றன.
அரசு மருத்துவமனை மகப்பேறியியல் முன்பு உள்ள அகலமான சாக்கடையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த சாக்கடையின் வழிப்பாதையில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு மரங்களின் கிளைகள் வெட்டிப்போடப்பட்டுள்ளன.
மேம்பாலம் வேலைகள் நடப்பதால் பொள்ளாச்சியிலிருந்து உடுமலை பேருந்து நிறுத்தத்துக்கு வரும் வாகனங்கள் கோவை பல்லடம் சாலை வழியே ஒரு வழிப் பாதையாக திருப்பி விடப்படுகின்றன. குறுகின சந்து வழியே திரும்பி தாராபுரம் சாலையை அடைந்து பஸ் ஸ்டாண்ட் செல்கிறது. இந்த வழியே பேருந்துகள், லாரிகள் நுழைந்து செல்ல பாடாதபாடு பட வேண்டும்.
தளி சாலையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தின் அருகே, உடுமலை நகராட்சி அலுவலகத்தின் ஓரத்தில் திரும்பும் சாலையில் ஏற்பட்டுள்ள சேறும் சகதியும் ஒரு அடி ஆழம் தேறும்.
இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வரும் இந்த இரண்டு வருடங்களாக மக்கள் படும் துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. மழை வந்தபிறகு பார்த்தால் சேறும், சகதியிலுமே வாழ வேண்டியிருக்கிறது. இனி வெயில் அடித்தால் அத்தனை சேறும் புழுதியாக மாறி பறக்குமே என்று அச்சமாக இருக்கிறது என்றனர்.