Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

ஆம்பூர் நூருல்லாபேட்டை, காதர்பேட்டை பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர் வாராததால் சுகாதார சீர்கேடு: கரோனா தொற்று அலையால் பொதுமக்கள் அச்சம்

ஆம்பூர் நகராட்சியில் பல வார்டுகளில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட் டுள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில், 3-வது வார்டுக்கு உட்பட்ட நூருல்லாபேட்டை, காதர்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இது தவிர ஆம்பூர் நகரில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தோல் தொழிற்சாலைகள் இப்பகுதியைச் சுற்றியே உள்ளன.

தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், அதிகாரிகள், முகவர்கள் என ஏராளமானோர் இப்பகுதியையொட்டி வசித்து வருவதால் ஆம்பூர் நகரின் முக்கிய பகுதியாக நூருல்லாபேட்டையும், காதர்பேட்டையும் திகழ்கிறது. இந்நிலையில், இப்பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய் தூர் வாரப்படாததால் அனைத்து தெருக்களிலும் கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதாகவும், இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து 3-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘நூருல்லா பேட்டையில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள தெருக்கால்வாய்கள் தூர்வாரி கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாகிறது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கால்வாய் மாதக்கணக்கில் தேங்குவதால் முழு அளவில் அடைப்பு ஏற்பட்டு குட்டைப்போல் காட்சியளிக்கிறது. இதனால், கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா, காலரா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

நூருல்லாபேட்டையில் நகராட்சி ஆரம் பப்பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியை சுற்றிலும் கழிவுநீர் குட்டைப்போல் தேங்கிக்கிடக்கிறது. கரோனா பரவல் காரணமாக தற்போது பள்ளி மூடப்பட்டிருப்பதால் மாணவர்கள் பெரும் ஆபத்தை எதிர்க் கொள்ளவில்லை என்றாலும் பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது தவிர தெருக்களில் சேரும் குப்பைக்கழிவுகளை கூட தூய்மைப்பணி யாளர்கள் அகற்ற வருவதில்லை. தற்போது கரோனா பரவல் வேகமெடுத்துள்ளதால் நகராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்பணியில் ஈடுபட்டு வருவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆம்பூர் பிரதான சாலைகளில் கிருமி நாசினி தெளித்து, நோய் தடுப்பு மருந்துகளை தூவும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. கழிவுநீர் கால்வாயில் சாக்கடை நீர் தேங்கியிருப்பதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் நிலத்தடியில் தேங்கியிருப்பதால் குடிநீருடன் கலந்து வரும் சூழ்நிலையும் சில இடங்களில் நேர்ந்துள்ளது.

இது குறித்து நகராட்சி அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் நிலையறிந்து நூருல்லாபேட்டை, காதர்பேட்டை போன்ற பகுதிகளில் கழிவுநீர் கால்வாயை சீர் செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து நகராட்சி அலுவலத்தில் விசாரித்தபோது, ‘‘ஆம்பூரில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மைப்பணியை மேற் கொள்ள தனியார் மூலம் ஒப்பந்தம் மேற் கொள்ளப்பட்டுள்ளது. தனியார் மூலம் 20 வார்டுகளில் தூய்மைப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது, கரோனா பரவல் தடுப்புப்பணிகளில் தூய்மைப்பணியாளர்கள் கவனம் செலுத்தி வருவதால் ஒரு சில வழக்கமான பணிகளை மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும், 36 வார்டுகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 1 முதல் 5 வார்டுகளில் ஓரிரு நாளில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ள உள்ளோம். அப்போது தெரு கால் வாய்களும் சீர் செய்யப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x