Published : 27 Apr 2021 06:30 am

Updated : 27 Apr 2021 08:14 am

 

Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 08:14 AM

வாணியம்பாடி பாலாற்று பகுதிகளில் மணல் திருடினால் குண்டர் சட்டத்தில் கைது: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரிக்கை

district-collector-shiva-arul-warns
பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டப்படுகிறது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி பாலாற்று பகுதி களில் மணல் திருடினால் குண்டர் சட்டம் பாயும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி, நாட்றாம்பள்ளி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் பாலாற்றின் பெரும் பகுதி விரிந்துள்ளன. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டியதாலும், பாலாற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளில் எதிர்பார்த்த மழை பெய்யாததால் கடந்த பல ஆண்டுகளாக பாலாறு வறண்டு காணப்படுகிறது.


வாணியம்பாடி பெரியபேட்டை வடக்கு பக்கமாக உள்ள பாலாற்றுப்பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியம் சார்பில் மிகப்பெரிய ஆழ்துளைக் கிணறு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இங்கிருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட கரிமாபாத், ஜாப்ராபாத், சிட்டிகாபாத் மற்றும் பெரியபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இது மட்டுமின்றி நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளும் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது.

நாளடைவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதாலும், பாலாற்றில் மணல் கொள்ளையால் பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்ததால் தண்ணீர் எடுப்பது படிப்படியாக குறைந்து விட்டது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், வாணியம்பாடி பாலாற்றுப்பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முடியாதகாரணத்தினால் எஞ்சியுள்ள குடிநீர் குழாய்களும் தற்போதுஒவ்வொன்றாக சேதமடைந்து குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘வாணியம்பாடி ராமைய்யன் தோப்பு பாலாற்றில் 5 அடியில் தோண்டப்பட்ட மணல் திருட்டு தற்போது 60 அடி வரை சுரண்டி எடுக்கப்படுகிறது. மணல் கொள்ளையர்களால் பாலாற்றின் அடையாளம் அழிவின் விளம்பில் சென்றுவிட்டது. கொடையாஞ்சி பகுதியில் தற்போது 15 அடி கால்வாயாக பாலாறு மாறிவிட்டது. பாலாற்றின் சில பகுதிகளில் குடியிருப்பும் வந்துவிட்டன.

கடந்த அரை நூற்றாண்டாக மணல் கொள்ளை தங்கு தடையின்றி நடக்கிறது. மணல் கொள்ளையில் பிரதான அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளே ஈடுபடுவதால் வருவாய், காவல் துறையினரும், பொதுப்பணித்துறை என அனைத்துத்துறையினரும் மணல் திருட்டை தடுக்க முன் வருவதில்லை. ‘கை புண்ணுக்கு கண்ணாடி எதற்கு’ என்ற சொல்லுக்கு ஏற்ப பாலாற்றில் மணல் கொள்ளை நடப்பது தெரிந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டுகின்றனர். தட்டிக்கேட்கும் ஒரு சில அதிகாரிகளையும் மணல் கொள்ளையர்கள் மிரட்டுகின்றனர். இதனால், அரசு அதிகாரிகள் செய்வதறியாமல் கைக்கட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.எனவே, மணல் கொள்ளையர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து குடிநீர் தடையின்றி கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் ‘இந்து தமிழ் திசை நாளிதழிடம்’ கூறும்போது, ‘‘மணல் கொள்ளையால் குடிநீர் குழாய் சேதமடைந்த தகவல் கிடைத்த அடுத்த சில மணி நேரங்களில் வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று அங்கு உடைந்த குடிநீரை சரி செய்துள்ளனர். மேலும், அப்பகுதியில் மணல் கொள்ளையர் நுழையாத வகையில் பொக்லைன் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதேநேரத்தில் மணல் கொள்ளையர்களை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்யவும், தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபடுவோர்களை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யவும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மணல் திருட்டை தடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கட்டிடப்பணிகளுக்கு ‘எம்-சாண்ட்’ பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும். தற்போது, கட்டப்பட்டு வரும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகளுக்கு எம்-சாண்ட் தான் பயன்படுத்தப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு சேலம், நாமக்கல் போன்ற பகுதிகளில் இருந்து எம்-சான்ட் கொண்டு வரப்படுகிறது. எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டிடப் பணிகளுக்கு எம்-சாண்டை பயன்படுத்திக்கொள்ளலாம். அதேநேரத்தில் பாலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வருவாய்த் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விரை வில் அதற்கான நடவடிக்கை தொடங்கும்’’ என்றார்.வாணியம்பாடி பாலாற்று பகுதிகள்வாணியம்பாடிமணல்குண்டர் சட்டம்திருப்பத்தூர்மாவட்ட ஆட்சியர்சிவன் அருள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x