

கரோனா தொற்றால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு எளிதான பணி வழங்க போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு பணியில் முன் களவீரர்களாக ஈடுபட்டுள்ள
காவல் துறையினரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.
அதன்படி, இதுவரை சென்னையில் மட்டும் 3,609 போலீஸார் கரோனா தொற்றுக்கு ஆளாகி அதில் 3,338 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதம் உள்ளவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை முதல் அலை மற்றும் இரண்டாம் அலையை சேர்த்து சென்னை காவல் துறையில் 7 பேர் மருத்துவ சிகிச்சையில் இருக்கும்போதும், 6 போலீஸார் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய பின்னரும் என மொத்தம் 13 போலீஸார் இறந்துள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்படும் போலீஸாரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. அதுவும் இளைஞர்களை விட வயது முதியவர்கள் அதிக அளவு கரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னை காவல் துறையில் 50 வயதுக்கு மேற்பட்ட போலீஸாருக்கு எளிதான பணிகளை வழங்க கூடுதல்
காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் மட்டும் 3,609 போலீஸார் கரோனோ தொற்றுக்கு ஆளாகி அதில் 3,338 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதம் உள்ளவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.