

சம்பளத்தை உயர்த்தி கேட்ட ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கிடங்கல், சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் என்ற குள்ள சரவணன்(44). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டல் ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். அதே ஓட்டலில் வேலை செய்துவரும் மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து ஓட்டலின் மேல் தளத்தில் தங்கியிருந்தார்.
அவருக்கு தினமும் ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அதை ரூ.700 ஆக உயர்த்தி தரும்படி ஓட்டல் உரிமையாளரான அம்பத்தூரைச் சேர்ந்த சத்தியேந்திர குமார் சிங்கிடம்(39) கேட்டு வந்துள்ளார். இது ஓட்டல் உரிமையாளருக்குப் பிடிக்கவில்லை. இதையடுத்து சரவணனை அதட்டி வைக்கும்படி அந்த ஓட்டலில் வேலை செய்துவந்த நேபாளத்தைச் சேர்ந்த தீன்பகதூரிடம்(32) அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 24-ம் தேதி இரவு சரவணனிடம் தீன்பகதூர் தகராறு செய்து, இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த மற்ற ஊழியர் இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் மறுநாள் காலை, சரவணன் வேலையிலிருந்தபோது, அங்கு வந்த தீன்பகதூர் மீண்டும் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், கடையிலிருந்த இரும்பு ராடு மற்றும் ஜல்லி கரண்டியை எடுத்து சரவணனை தாக்கியுள்ளார்.
போலீஸார் விசாரணை
இதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். தகவலறிந்து அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக தீன்பகதூர், ஓட்டல் உரிமையாளர் சத்தியேந்திர குமார் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.