

அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் தந்தை ஆர்.போஸ். இவர், அமைச்சருடன் டி.கல்லுப்பட்டி அருகே டி.குண்ணத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அம்மா கோயில் வளாகத்திலேயே வசித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு 7 மணி அளவில் சிகிச்சை பலனின்றி போஸ் காலமானார்.
சென்னையில் நேற்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் உதயகுமாருக்கு இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரைக்கு நள்ளிரவில் வந்தடைந்தார்.
பின்னர் போஸ் உடல் டி.குண்ணத்தூர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று பிற்பகல் 2 மணிக்கு அம்மா கோயில் வளாகத்திலேயே அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இறந்த போஸுக்கு மனைவி மீனாள், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்றும் யோகி என 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஆர்.பி.உதயகுமாரின் தந்தை மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.