

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்த நிலையில், மே 1-ம் தேதி முதல் சனிக்கிழமைகளிலும் மீன், இறைச்சிக் கடைகளை மூடுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இரவு ஊரடங்கு, ஞாயிறு தளர்வில்லா முழு ஊர
டங்கு ஆகியவை ஏப்.20-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.
அரசு அறிவிப்பின்படி திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கை கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன.
டாஸ்மாக் மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து, டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் அனைத்தும் நேற்று காலை முதல் மூடப்பட்டன. கடைகள் திறக்கப்பட்டிருந்ததால், மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, அரசு அறிவிப்பை தொடர்ந்து, மதுக்கூடங்களை மூடும்படியும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியதுடன், கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர்.
பெரிய கடைகள் (Big Format Shops), வணிக வளாகங்கள் (Shopping Malls) நேற்று காலை முதல் மூடப்பட்டன. சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் மூடப்பட்டிருந்தன. பல மாவட்டங்
களிலும் சலூன்களை திறக்க அனுமதிக்க கோரி மாவட்ட ஆட்சியர்களிடம் சம்பந்தப்பட்ட சங்கத்தினர் மனு அளித்தனர்.
உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்று தகவல் பலகை வைக்கப்பட்டு, பார்சல் கவுன்ட்டர் மட்டும் திறக்கப்பட்டிருந்தன.
நேற்று காலை முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. மசூதிகள், தர்காக்களில் இதுகுறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் மாலையே அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்தது. கோயில்களில் வழக்கம்
போல ஊழியர்களை கொண்டு பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டன.
புதுச்சேரி தவிர ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்தும் தமிழகம் வருவோர், வெளிநாடுகளில் இருந்து விமானம், கப்பல் மூலம் வருவோர் http://eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்த விவரத்தை தமிழகத்துக்குள் நுழையும்போது காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ரயில் நிலையங்கள், விமான நிலையங்களிலும் இ-பதிவை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதுதவிர, வழக்கம்போல, நேற்று இரவு 10 மணி முதல் இரவு ஊரடங்கும் அமலானது.
சனிக்கிழமை கட்டுப்பாடு
தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கு ஏப்.25-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனால் ஏப்.24-ம் தேதி சனிக்கிழமை மீன் சந்தைகள், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை காசிமேடு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மீன் சந்தைகளிலும் மக்கள், வியாபாரிகள் பலர் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி இன்றியும் இருந்ததை பார்க்க முடிந்தது.
இந்நிலையில், புதிய அறிவிப்பை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
இதுகுறித்த அரசாணையில், ‘மீன் மார்க்கெட்கள், மீன்கடைகள், கோழிக்கறிக் கடைகள் உள்ளிட்ட அனைத்து இறைச்சிக் கடைகளும் சனிக்கிழமையும் மூடப்பட வேண்டும். இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.