Published : 27 Apr 2021 04:55 AM
Last Updated : 27 Apr 2021 04:55 AM

கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க கடுக்காய் ஊறல் நீர், ஆயுஷ் குடிநீர், துளசி நீர் உள்ளிட்ட 6 மருந்துகள்: செய்முறை குறித்து விளக்குகிறார் தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மருத்துவர் ச.சிவகுமார்

சென்னை 

கரோனா வைரஸ் தொற்று தற்போது 2-ம் அலையாக உருவெடுத்து, உலகெங்கும் வீரியமாகவும், வேகமாகவும் பரவி வருகிறது. கரோனாவின் முதல் அலையில், இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் பாதிப்பு குறைவு. இதற்கு சித்த மருந்தான‘கபசுரக் குடிநீர்’ பங்கு என்ன என்பதை உலகுக்கு தெரியப்படுத்தியதுடன், கபசுரக் குடிநீரை தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்தனர் சித்த மருத்துவர்கள்.

தமிழகத்தில் கபசுர குடிநீரால் மட்டுமே கரோனா கட்டுக்குள் வந்தது என அநேக ஆட்சியர்கள் சான்றளித்தனர். ஆனால் காலப்போக்கில் அலட்சியமும், அரசின் வழிகாட்டுதல்களைக் கடைபிடிப்பதில் காட்டிய கவனக்குறைவுமே தற்போது கரோனா தொற்று அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

இந்நிலையில், கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க மிகவும் பயன்படும் கடுக்காய் ஊறல் நீர், சீந்தில் பால், ஆயுஷ் குடிநீர், நெல்
லிக்காய் தேனூறல், இஞ்சி கற்பம்,துளசி நீர் ஆகிய 6 சித்த மருந்துகள் பற்றியும் அதன் செய்முறைகள் குறித்தும் விளக்குகிறார் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த நிறுவனத்தின் (மருத்துவமனை) குணபாடம் துறை இணை பேராசிரியர் மருத்துவர் ச.சிவகுமார்.

கடுக்காய் ஊறல் நீர்

கடுக்காயின் கொட்டையை நீக்கிவிட்டு ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ள வேண்டும். 1 லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் கடுக்காய் தூளைச் சேர்த்து 24 மணி நேரம் ஊறிய பிறகு அதைப் பயன்படுத்தலாம். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் நோய் தற்காப்புக்கு உதவும். மேலும் கடுக்காயானது நுண்ணுயிர் நோய் கிருமிகளுக்கு எதிராக நன்கு செயல்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

சீந்தில் பால்

சித்த மருத்துவத்தில் சீந்தில் மூலிகையானது அநேக நோய் எதிர்ப்பு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. 50 கிராம் சீந்தில் தண்டை ஒன்றிரண்டாக சிதைத்து 500 மி.லி பாலில்கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம். இவ்வாறு தினமும் பருகுவதன் மூலம் நமது நோய் எதிர்ப்புதிறனை அதிகப்படுத்திக் கொள்வதுடன் கரோனாவிலிருந்தும் தற்காத்துக் கொள்ள முடியும்.

ஆயுஷ் குடிநீர்

கரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும் அவர்களின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கவும் ஆயுஷ் அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மருந்துதான் இந்த ஆயுஷ் குடிநீர். இது தமிழர்கள் காலம்காலமாக பயன்படுத்தி வரும் சுக்குமல்லி காப்பியின் மாற்று வடிவமே. சுக்கு 100 கிராம், மிளகு 50 கிராம், லவங்கப்பட்டை 100 கிராம், துளசி இலை 200 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து வைத்துக் கொள்ளவும். இதில் 50 கிராம் எடுத்து அதனுடன்200 மி.லி நீர் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். 4-ல் 1 பங்காக வற்றியதும் வடிகட்டிக் குடிக்கவும். தேவையெனில் சுவைக்காக சிறிதளவு பனைவெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்க்கலாம். இதை காலை - மாலை பருகலாம்.

இதில் உள்ள மருந்துச் சரக்குகள் அனைத்து வகையான நோய்க் கிருமிகளுக்கும் எதிராக நன்கு செயல்படுகின்றன. குறிப்பாக, நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் கிருமிகளை கொல்லக் கூடியது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

நெல்லிக்காய் தேனூறல்

சித்த மருத்துவத்தில் நெல்லிக்காயை தேனூறலாக செய்து சாப்பிட்டால் நோயின்றி இளமையாக நீண்ட நாட்கள் வாழ முடியுமென்று கூறப்பட்டுள்ளது. 500 கிராம் நெல்லிக்காயை கொட்டையை நீக்கிவிட்டு கீற்று கீற்றாக நறுக்கி 500 கிராம் சுத்தமான தேனிலிட்டு வெள்ளைத்துணியால் வேடுகட்டி தினமும் வெயிலில் ஊறவைத்து எடுக்க வேண்டும். நன்றாக ஊறியவுடன், அதனுடன் புதிதாக தேன் சேர்த்து சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தவும். இதில் 1 - 2 கீற்றை தேனுடன் சேர்த்து காலை - மாலை சாப்பிட்டு வந்தால் நோய்த் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் - சி மற்றும் தேனிலுள்ள துத்தநாகச் சத்து கரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

இஞ்சி கற்பம்

‘காலையிஞ்சி கடும்பகல் சுக்கு’ என்பது சித்த மருத்துவத்தில் இஞ்சியைக் காலையில் கற்பமாக உண்ண வேண்டும் என்பதாகும். இஞ்சியை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிது நெய் சேர்த்து வதக்க வேண்டும். பின்பு அதை நன்றாக அரைத்து அதனுடன் வெல்லம் அல்லது பனைவெல்லம் சேர்த்துதினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா
வதுடன் நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் முடியும். பலவகையான வைரஸ் நோய் கிருமிகளுக்கு எதிராக இஞ்சி செயல்படுகிறது.

துளசி நீர்

100 கிராம் துளசி இலை எடுத்து அதை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அந்தத் தண்ணீரை துளசி இலையு
டன் சேர்த்து பருகி வருவதன் மூலம்கரோனா தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

இதுபோன்ற சித்தவைத்திய மருந்துகளுடன், அரசின் வழிகாட்டுதலான முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியைக் கடை
பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல், மூச்சுப் பயிற்சி செய்தல், ஆவி- வேது பிடித்தல், மஞ்சள் - உப்பு கலந்த நீரில் கொப்பளித்து வாய், தொண்டையை சுத்தம் செய்தல், சத்தான உணவுகளை உண்ணுதல், கபசுரக் குடிநீர் பருகுதல் போன்ற வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம் நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் கரோனாவில் இருந்துகாப்பாற்ற முடியும். இவ்வாறு மருத்துவர் சிவகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x