

கள்ளழகர், வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் கோயில் வளாகத்திலேயே வைகை ஆறு படங்களுடைய பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஒருபகுதியாக நடைபெறும் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றது.
இந்நிகழ்ச்சியின்போது தென்மாவட்டங்களைச் சேர்ந்த பல லட்சம் பேர் வைகை ஆற்றில் திரண்டு கள்ளழகரை வரவேற்பது வழக்கம்.
மேலும், கள்ளழகரைப்போல் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சவும், திரி எடுத்தும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற்றுவர்.
தற்போது கரோனா 2ம் அலை பரவல் காரணமாக திருவிழாக்களுக்கு தடை விதித்து கோயில் வளாகத்திலேயே நடத்துவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால் திருவிழாக்கள் பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறுகின்றன. அதன்படி கள்ளழகர் கோயிலில் சித்திரைத்திருவிழா ஏப்.23ம் தேதி சுவாமி புறப்பாடுடன் திருவிழா கோயில் வளாகத்தில் தொடங்கியது.
நான்காம் நாளான இன்று கள்ளழகர் திருக்கோலத்தில் எதிர்சேவை நடைபெறுகிறது.
ஐந்தாம் நாளான நாளை (ஏப்.27) காலை 8 மணியளவில் ஆண்டாள் மாலை சாற்றுதல் நடைபெறும். பின்னர் 9 மணியளவில், கள்ளழகர் தங்கக்குதிரையில் ஆடி வீதியில் புறப்பாடாகிறார்.
அப்போது வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதுபோல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வைகை ஆறு படங்களை பிளக்ஸ் பேனர்களாக வைத்துள்ளனர்.
தரையில் பாலித்தீன் விரிப்புகள் விரித்து அதில் தண்ணீரை நிரப்பி ஆற்றில் இறங்குவதுபோல் கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் கண்கவர் நிகழ்வாக இருந்தாலும், வைகை ஆற்றில் அழகர் இறங்கும் கண் கொள்ளா நிகழ்வைக் காண இயலவில்லையே என மதுரை மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.