50% பணியாளர்களுடன் மட்டுமே நீதிமன்றங்கள் செயல்படவேண்டும்: பதிவாளர் உத்தரவு

50% பணியாளர்களுடன் மட்டுமே நீதிமன்றங்கள் செயல்படவேண்டும்: பதிவாளர் உத்தரவு
Updated on
1 min read

50 சதவீதப் பணியாளர்களுடன் மட்டுமே உயர் நீதிமன்றம், மதுரைக் கிளையின் அனைத்துப் பிரிவுகளும் செயல்பட வேண்டுமென தலைமைப் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், நீதிமன்றத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும்படி சுகாதாரத் துறைச் செயலர் தலைமை நீதிபதியைச் சந்தித்தபோது கோரிக்கை வைத்திருந்தார். அதனை ஏற்று, நீதிமன்றத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்குடன், நேரடியாக வழக்கை விசாரிக்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு, காணொலி மூலமாக நடைபெற்று வருகிறது.

வழக்கறிஞர் அறைகள், சங்கங்கள், நூலகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் நீதிபதிகள் மட்டும் நீதிமன்றங்களுக்கு வந்து விசாரித்து வருகின்றனர்.

கரோனா பரவலைத் தடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கையாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரைக் கிளை ஆகியவற்றில் அனைத்துப் பிரிவுகளும் 50 சதவீதப் பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், மே 1-ம் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஊழியர்களை இரு பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாட்கள் பணி எனச் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்றும், மற்றவர்கள் பணிக்கு வரத் தயாராக வீட்டில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீதிமன்றம் பிறப்பிக்கும் வழிகாட்டுதல் மட்டுமல்லாமல், கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு அவ்வப்போது பிறப்பிக்கும் விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் தலைமைப் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in