மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை

மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை
Updated on
2 min read

18 வயதிலிருந்து 45 வயதுவரை அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்குவதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துவரும் சூழல் மே 1ம் தேதி தொடங்கி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், 18 வயதிலிருந்து 45 வயதுவரை உள்ள அனைவருக்கும் மாநில அரசுகள் கரோனா தடுப்பூசியை மருந்து நிறுவனங்களிடமிருந்து தாமே கொள்முதல் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும், தடுப்பூசி விலையை மருந்து நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் சுதந்திரத்தையும் கொடுத்தது. இதனால், சீரம் இன்ஸ்டிட்டியூட் நிறுவனம் அதன் கோவிஷீல்டை மத்திய அரசுக்கு ரூ.150, மாநில அரசுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600க்கு வழங்க விலை நிர்ணயித்து அந்நிறுவனத் தலைவர் அடார் பூணாவாலா அறிவித்தார்.

அதேபோல், கோவேக்சின் தடுப்பூசியை மத்தியஅரசுக்கு ஒரு டோஸ் ரூ.150விலையில் வழங்கப்படும் என்றும், மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.600க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200க்கும் விற்பனை செய்யப்படும் என்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எம் இலா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 18 வயதிலிருந்து 44 வயதுவரை அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்குவதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

முதல்வர் கடிதம் விவரம் பின்வருமாறு:

நாடு முழுவதும் 3ம் கட்ட தடுப்பூசி திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 45 வயது உடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியில் புதிய கொள்கையை மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது. அதன்படி, மாநில அரசுகளே மருந்துகளை கொள்முதல் செய்து இந்த வயதுக்குட்பட்ட மக்களுக்கு வழங்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், மருந்து நிறுவனங்களும் தடுப்பூசிகளுக்கான விலையை ஏற்கெனவே நிர்ணயம் செய்துவிட்டது. அதுவும் தடுப்பூசிகளை மருந்து நிறுவனங்கள் மத்திய அரசுக்கு வழங்கும் விலையைக் காட்டிலும் மாநில அரசுகளுக்கு வழங்கும் விலையில் பெரியளவில் வித்தியாசம் இருக்கிறது. இது முற்றிலும் நியாயமற்றது.

மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய சுமையை சுமத்துவதால் இது நியாயமற்றது. இத்தகைய சுமையை சுமக்க மாநில அரசுகள் போதிய நிதி வளத்திலும் இல்லை. மேலும், கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசே தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் நியாயமானதே. ஆகையால், மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டத்தை செயல்படுத்துவதற்கென மத்திய அரசே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு அனுப்புவதைப் பரிசீலிக்க வேண்டும். மேலும், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாதவாறு இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, தமிழகத்தில் 18 வயது முதல் 45 வயதுள்ள அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பூசி வழங்குமென்று ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in