

திருவாரூர் மாவட்ட வாக்கு எண்ணும் மையத்தில் தீயணைப்புப் படை வீரர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த 4 தொகுதிகளுக்கும் கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் பகுதியில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
வருகிற மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் காவல்துறையினர் 5 அடுக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய துணை ராணுவப் படையினர் 100 பேர் மற்றும் 300 காவலர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் மூன்று பிரிவுகளாகப் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் திருமக்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வரும் அற்புதம் என்பவர் திருவாரூர் வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று காலை குளிப்பதற்காகச் சென்ற அவர் வெகுநேரமாகியும் வராததை அடுத்து உடன் பணியாற்றும் நபர்கள் குளியலறைக்குச் சென்று பார்த்தனர்.
அப்போது அங்கு அவர் மயங்கிக் கீழே கிடந்துள்ளார். உடனடியாக அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சோதனை செய்தபோது அவர் இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்கு எண்ணும் மையத்தில் தீயணைப்புப் படை வீரர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவரது உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.