

நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு உர மூட்டைகளை விற்பனை செய்தால் உரவிற்பனையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் எச்சரிக்கை விடுத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில், கோடை மழை பரவலாக பெய்து வருவதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உழவுப் பணிகளை விவசாயிகள் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர். விவசாயப்பணிகளுக்கு தேவையான உரங்கள் தடையின்றி கிடைக்க மாவட்ட வேளாண்மை துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட விவசாயப் பணிகளுக்காக 2,685 மெட்ரிக் டன் யூரியா, 340 மெட்ரிக் டன் டிஏபி, 2130 மெட்ரிக் டன் காம்பளக்ஸ், 640 மெட்ரிக் டன் பொட்டாஷியம் ஆகிய உரங்கள் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
உர மூட்டைகளை விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி உரிய விலை கொடுத்து வாங்கி பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதே நேரத்தில், உரமூட்டைகளை அதிக விலைக்கு விற்பது, இருப்பு இருந்தும், இல்லை என விவசாயிகளை அலைக்கழிப்பது உள்ளிட்ட செயல்களில் உர விற்பனையாளர்கள் ஈடுபட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மை துறை எச்சரித்திருந்தது.
மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்தால் விவசாயிகள் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம் என வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உர விற்பனை நிலையங்களில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் இன்று (ஏப்.26) திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஒவ்வொரு உர விற்பனை நிலையங்களிலும் உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை காட்டிலும் அதிக விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? விற்பனையாகும் உரங்களுக்கு உரிய ரசீது வழங்கப்படுகிறதா ? விவசாயிகளிடம் ஆதார் எண்ணை பெற்று விற்பனை கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்யப்படுகிறதா ? என்பதை அவர் ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து உர விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட உரங்கள் எவ்வளவு ? விற்பனையான உரங்கள் போக தற்போது இருப்பு உள்ள உரங்கள் எவ்வளவு ? இருப்பு விவரங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா ? என்பதையும் அவர் ஆய்வு செய்தார்.
அப்போது, உரவிற்பனையாளர்களிடம் வேளாண்மை இணை இயக்குநர் ராஜசேகர் கூறும்போது, ‘‘ஒவ்வொரு உர விற்பனை நிலையங்களிலும் உரம் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் அறிவிப்பு பலகையில் தினமும் எழுதி வைக்க வேண்டும்.
அனுமதி பெறாத உரங்களை எக்காரணத்தை கொண்டும் விற்பனை செய்யக்கூடாது, அதேபோல நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு உர மூட்டைகளை விற்பனை செய்வது, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அதிக விலைக்கு உரமூட்டைகளை விற்பனை செய்வது தெரியவந்தால் விற்பனையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க நேரிடும்.
கடந்த 2020-21-ம் ஆண்டு விற்பனையான அதேவிலையில் தான் பொட்டாஷியம், காம்பளக்ஸ், டிஏபி போன்ற உரங்களை விற்பனை செய்ய வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித்துள்ளது. எனவே அரசு அறிவித்துள்ள விலையில் தான் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் உரக்கட்டுப்பாட்டு ஆணைப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மை உதவி இயக்குநர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) அப்துல்ரகுமான், வேளாண்மை அலுவலர் ஸ்வதிகா ஆகியோர் உடனிருந்தனர்.