ஞாயிறு ஊரடங்கு நிறைவு: ஓசூர் - பெங்களூரு இடையே பேருந்து இயக்கம் தொடங்கியது

ஞாயிறு ஊரடங்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக உள்ள தமிழக, கர்நாடக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள். | படம்: ஜோதி ரவிசுகுமார்.
ஞாயிறு ஊரடங்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக உள்ள தமிழக, கர்நாடக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள். | படம்: ஜோதி ரவிசுகுமார்.
Updated on
2 min read

தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கு நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழக நகரங்களுக்கும், ஓசூரைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் பெங்களூரு வழித்தடத்திலும் தமிழக அரசுப் பேருந்துகள், கர்நாடக அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் ஓடத்தொடங்கி உள்ளன.

தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து முதல் ஞாயிற்றுக் கிழமையான நேற்று (25-ம் தேதி) ஓசூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஓசூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மகாத்மா காந்தி சாலை, நேதாஜி சாலை, ஏரித்தெரு, ராயக்கோட்டை சாலை, தேன்கனிக் கோட்டை சாலை உள்ளிட்ட பரபரப்பு மிகுந்த அனைத்துச் சாலைகளிலும் கடைகள் மூடப்பட்டு, வாகன இயக்கம், மக்கள் நடமாட்டம் இன்றி அமைதியாகக் காணப்பட்டது. இந்தச் சாலைகளில் பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறந்திருந்தன.

அதேபோல 24-ம் தேதி சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மூடப்பட்ட ஓசூர் பேருந்து நிலையம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

இன்று ஊரடங்கு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அனைத்துக் கடைகளும் திறக்கப்பட்டு நகரப்பகுதி இயல்பு நிலைக்குத் திரும்பியது. அதேபோல இன்று அதிகாலை 4 மணி முதல் பேருந்துகளின் இயக்கம் தொடங்கியுள்ளது.

ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழக நகரங்களுக்கும், ஓசூரைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும், பெங்களூரு வழித்தடத்திலும் தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் இன்று காலை முதல் ஓசூர் - பெங்களூரு வழித்தடத்தில் கர்நாடக அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் ஓடத்தொடங்கி உள்ளன. இருமாநில அரசுப் பேருந்துகளிலும் 50 சதவீதம் பயணிகளுடன், முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து ஓசூர் பேருந்து நிலைய நேரக்காப்பாளர் கூறும்போது, ''ஞாயிறு ஊரடங்கு எதிரொலியாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள், இன்று அதிகாலை 4 மணி முதல் இயங்கத்தொடங்கி உள்ளன. இரவு நேர ஊரடங்கு காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஊர்களுக்கு இரவு 10 மணிக்குள் சென்றடையும் வகையில் ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து கடைசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அதன்படி ஓசூரிலிருந்து தருமபுரிக்கு இரவு 7.30 மணிக்கும், கிருஷ்ணகிரிக்கு இரவு 8.45 மணிக்கும், வேலூர் நகருக்கு மாலை 6 மணிக்கும், திருவண்ணாமலைக்கு மாலை 6 மணிக்கும் கடைசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொது மக்கள் இந்தப் பேருந்து வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து கர்நாடகா அரசு பேருந்து மையம் நேரக்காப்பாளர் கூறும்போது, ''ஊரடங்கு முடிந்து இன்று காலை 6.30 மணி முதல் கர்நாடக அரசுப் பேருந்துகள் ஓசூர் வழித்தடத்தில் ஓடத்தொடங்கி உள்ளன. தற்போது ஓசூர் - பெங்களூரு இடையே 20 கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்தப் பேருந்துகளில் ஒரு பயணிக்கும் மற்றொரு பயணிக்கும் இடையே இடைவெளி இருக்கும் வகையில் முகக்கவசம் அணிந்துள்ள 30 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு இருப்பதால் தினமும் இரவு 10 மணி வரை மட்டுமே ஓசூர் - பெங்களூரு வழித்தடத்தில் கர்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்'' என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in