Published : 26 Apr 2021 01:44 PM
Last Updated : 26 Apr 2021 01:44 PM

4 மாதம் மட்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

4 மாதம் மட்டும் ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதி, தமிழகத்தின் தேவைக்கு ஆக்சிஜன், பிறகே வெளி மாநிலங்களுக்கு சப்ளை உள்ளிட்ட அம்சங்களுடன் அனுமதி என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்படும் நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி மடியும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆக்சிஜன் மட்டும் தயாரித்து அளிக்கிறோம் என வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.

ஆனால், ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களும், தமிழக அரசும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்தன. பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. இந்நிலையில் அரசே ஆலையை ஏற்று நடத்தலாமே என உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.

இதுகுறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக அரசு தெரிவித்த நிலையில், இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்டியது. இந்தக் கூட்டத்தில் 8 கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தன.

ஆக்சிஜன் தயாரிப்புக்கு மட்டுமே அனுமதி, மின்சாரத்தைத் தமிழக அரசு மட்டுமே வழங்க வேண்டும், இதை வைத்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க நடவடிக்கை, எதிலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் செயல்பட அனுமதி வழங்கக் கூடாது. 4 மாதத்திற்கு மட்டுமே தற்காலிக அனுமதி, ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்து தமிழகப் பயன்பாட்டுக்குப் போக வெளி மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகள் தரப்பில் ஒருமித்த கருத்தாக வெளிப்பட்டது.

அனைத்துக் கட்சிகள் கருத்தை அரசு ஏற்கும் எனத் தெரிவித்த முதல்வர் பழனிசாமி, ஆக்சிஜன் உற்பத்திக்காக 4 மாதங்களுக்கு மட்டுமே அனுமதிக்கலாம், ஆக்சிஜன் உற்பத்தியை உள்ளூர் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு அமைத்துக் கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும், ஸ்டெர்லைட் ஆலை இயங்கலாம். ஆனால், அரசின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இயங்க வேண்டும். தற்காலிகமான ஆக்சிஜன் தேவைக்கு மட்டுமே ஆலை திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தின. இதில் ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

இதுகுறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பிராண வாயு தேவையைப் பூர்த்தி செய்ய தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தின் பிராண வாயு ஆலையை மட்டும் இயக்குவது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு, கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

1) உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தில் அமைந்துள்ள பிராண வாயு உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர் செய்து இயக்கிக் கொள்ள தற்காலிகமாக (நான்கு மாதங்களுக்கு மட்டும்) கோவிட்-19 நோய் தொற்று காலம் முடியும் வரை தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் வழங்கப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தி இயங்க அனுமதிக்கலாம்.

பிராண வாயுவின் தேவையைக் கருத்தில் கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்தக் காலம் பின்னர் நீட்டிக்கப்படலாம். இத்தொழிற்சாலையில் எக்காரணத்தைக் கொண்டும், தொழிற்சாலையின் தாமிர உற்பத்தி உட்பட எந்தவித உற்பத்தியையும், மின் உற்பத்தி அலகையும் எக்காரணம் கொண்டும் திறக்கவோ, இயக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது. இந்தக் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

2) உற்பத்தி செய்யப்படும் பிராண வாயுவில் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டின் தேவை போக அதிகப்படியாக உள்ளதை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்.

3) பிராண வாயு உற்பத்தி செய்யும் பகுதியில், பிராண வாயு உற்பத்தியுடன் நேரடித் தொடர்புடைய தொழில்நுட்பப் பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதிச் சீட்டுடன் அனுமதிக்கப்படுவார்கள். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும். எக்காரணத்தைக் கொண்டும் பிராண வாயு உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகையும் செயல்பட அனுமதிக்கப்படாது.

4) இந்நேர்வில், தற்காலிக பிராண வாயு உற்பத்தியைக் கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். கண்காணிப்புக் குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், சார் ஆட்சியர், தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தூத்துக்குடி மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர், பிராண வாயு தயாரிக்கும் தொழிற்சாலை தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த இரண்டு அரசு அலுவலர்கள், மற்றும் அந்தப் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள்/ சுற்றுச்சூழல் சார்ந்த அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் ஆலை எதிர்ப்புக் குழுவினர் ஆகியோரிலிருந்து மூன்று நபர்கள் இக்கண்காணிப்புக் குழுவில் இடம்பெறுவர். இந்தக் குழு, பிராண வாயு தயாரிக்கும் முழுப் பணியையும் மேற்பார்வையிடும் மற்றும் பிராண வாயு தயாரிக்கும் ஆலையை இயக்குவது பற்றி இந்தக் குழு முடிவெடுக்கும்.

5) தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பிராண வாயு தமிழ்நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் தேவைக்குப் போக மீதமுள்ள பிராண வாயுவை பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்”.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x