சோதனையான நிலையில் நாம் இருக்கின்றோம்; அனைத்துக் கட்சிகளையும் அழைக்காதது ஏன்? முதல்வர் பழனிசாமி பேச்சு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
2 min read

தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தால், சோதனையான நிலையில் நாம் இருக்கின்றோம் என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

இன்றோ, நாளையோ நீதிமன்றத்தில் வழக்கு வருகின்ற சூழ்நிலை இருக்கின்ற காரணத்தால், அனைத்துக் கட்சிகளையும் அழைக்க இயலவில்லை என்றும் முதல்வர் பேசினார்.

கரோனா தொற்று காலத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் அவசரத் தேவையின் காரணமாக, ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க இன்று (ஏப்.26) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

"கோவிட்-19 முதல் அலையின்போது தமிழ்நாடு அரசு எடுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் காரணமாக நோய்த் தொற்று தமிழகத்தில் படிப்படியாகக் குறைந்து, இறப்பு விகிதமும் குறைக்கப்பட்டது.

நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் திரவ ஆக்சிஜன் கொள்ளளவை அதிகரித்தல், கோவிட் படுக்கைகள் அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருமளவில் அதிகரிக்க தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கோவிட் - 19 இரண்டாம் அலையின் தாக்கம் கட்டுக்குள் உள்ளது.

சில மாநிலங்கள் அளவுக்குத் தமிழ்நாட்டில் இந்த நோயின் தாக்கம் அதிக அளவில் இல்லையென்றாலும், இப்போது நாள்தோறும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டிருக்கின்ற நிலையை நாம் பார்க்கின்றோம்.

இருப்பினும், தொடர்ந்து அதிகரித்து வரும் இந்நோய்த் தொற்றின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மருத்துவ உட்கட்டமைப்புகளை, குறிப்பாக, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, நேற்றைய தினம், பிரதமருக்கு, தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் மருத்துவ ஆக்சிஜனைத் தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்திக் கடிதம் எழுதியிருக்கின்றேன்.

இந்நிலையில், தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் 1997 முதல் 2018 வரை இயங்கி வந்த வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழ்நாடு அரசால் நிரந்தரமாக முத்திரையிடப்பட்டு, மூடப்பட்டது. அரசின் இந்த நடவடிக்கையை சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்து, தற்போது உச்ச நீதிமன்றத்தில், அந்த நிறுவனம் ஒரு இடைக்கால மனுவை கீழ்க்காணும் வேண்டுகோளுடன் தாக்கல் செய்துள்ளது.

'தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்திலுள்ள முக்கிய சொத்துகளைப் பாதுகாத்து, பராமரிக்க அனுமதிக்க வேண்டும்; கரோனா தாக்கத்தினால், தேவைப்படும் ஆக்சிஜனைத் தங்களது இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடத்திலிருந்து நாளொன்றுக்கு வாயு நிலையிலுள்ள ஆக்சிஜனை 1,050 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து அதனை அருகிலிருக்கும் மருத்துவமனைகளுக்கும் மற்றும் நாட்டின் பிற மாநிலங்களில் கோவிட் - 19 சிகிச்சைக்கும் தேவைக்கேற்ப இலவசமாக விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும்' எனக் கேட்டுள்ளது.

வேதாந்தா நிறுவனம் தங்களது நிறுவனத்திலுள்ள இரண்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கூடத்தில், உபகரணங்களின் நிலைமைக்கேற்ப 2 அல்லது 4 வாரங்களுக்குள்ளாகவே வாயு நிலையிலுள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்து தர முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இந்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில், 22.4.2021 மற்றும் 23.4.2021 ஆகிய தினங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், தமிழ்நாடு அரசின் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இன்று அல்லது நாளை மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கின்றது, தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தால், ஒரு முக்கியமான நிலையில், சோதனையான நிலையில் நாம் இருக்கின்றோம். மக்களுடைய உயிரைக் காப்பாற்றுவது அனைவருடைய கடமை. அந்தக் கடமையுணர்வோடு அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியிருக்கின்றோம்.

இருந்தாலும், இன்னும் அனைத்துக் கட்சிகளுடைய கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்றுதான் அரசு எண்ணியது. ஆனால், இன்றோ, நாளையோ நீதிமன்றத்தில் வழக்கு வருகின்ற சூழ்நிலை இருக்கின்ற காரணத்தால், அனைத்துக் கட்சிகளையும் அழைக்க இயலவில்லை".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in