Published : 26 Apr 2021 11:47 AM
Last Updated : 26 Apr 2021 11:47 AM

அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு விசிகவுக்கு அழைப்பில்லை; பாஜகவின் முடிவை மக்கள் மீது திணிப்பது சரியல்ல: ரவிகுமார் எம்.பி, விமர்சனம்

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு குறித்து அரசு கூட்டிய கூட்டத்தில் பிரதான கட்சியான விசிகவுக்கு அழைப்பில்லை, ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பாஜக முடிவை மக்கள் மீது திணிக்கவே இந்த கூட்டம் என ரவிகுமார் எம்.பி. விமர்சித்துள்ளார்.

கரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்படும் நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி மடியும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆக்சிஜன் மட்டும் தயாரித்து அளிக்கிறோம் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

ஆனால் ஏற்கெனவே ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களும், தமிழக அரசும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்தன. பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன. இந்நிலையில் அரசே ஆலையை ஏற்று நடத்தலாமே என உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்தது.

இதுகுறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக அரசு தெரிவித்த நிலையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை அரசு கூட்டியது. இந்தக் கூட்டத்தில் 8 கட்சிகள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தன. மதிமுக மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளை அழைக்கவில்லை. இதுகுறித்து விசிக தலைவர்களில் ஒருவரான ரவிகுமார் எம்.பி. கண்டனம்.

தெரிவித்துள்ளார். அவரது ட்விட்டர் பதிவு:

“ஆட்சியிலிருந்து போகவிருக்கும் அதிமுக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டங்கள் நடத்துவதில் இதுவரை அது கடைபிடித்த நடைமுறையைக் கைவிட்டு இப்போது எட்டு கட்சிகளை மட்டும் கூட்டி கூட்டம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் பாஜகவின் முடிவை தமிழக மக்கள்மீது திணிப்பது சரியல்ல”, என பதிவிட்டுள்ளார்.

“கடந்தக்காலங்களில் இதுபோன்ற கூட்டங்களுக்கு பிரதான கட்சிகளை அழைத்த அரசு தற்போது இவ்வாறு நடந்துள்ளது கண்டிக்கத்தக்கது என தெரிவித்த அவர் தற்போதுள்ள கரோனா சூழ்நிலை குறித்தும் இந்தக்கூட்டத்தில் ஆலோசித்திருக்க வேண்டும், ஆனால் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை மட்டுமே இந்தக்கூட்டப்பொருளாக்கியுள்ளது”.

என அவர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x