Published : 26 Apr 2021 03:17 AM
Last Updated : 26 Apr 2021 03:17 AM

தடுப்பூசியை மக்கள் இயக்கம் ஆக்குவோம்: மருத்துவர் ஆர்விஎஸ் சுரேந்திரன் வேண்டுகோள்

சென்னை

கரோனா தடுப்பூசியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று தமிழகமருத்துவ கவுன்சில் உறுப்பினர் ஆர்விஎஸ் சுரேந்திரன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:

மனித குலத்துக்கும், வைரஸ் நுண்ணுயிரிக்கும் 2 லட்சம் ஆண்டுகளாக நடக்கும் போராட்டத்தில், நமக்கு இன்றுவரை இறுதி வெற்றி கிடைக்கவில்லை. வைரஸ் கிருமி 20, 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய வடிவில் வந்து, ஏராளமான உயிர்களைப் பறிக்கிறது. ஸ்பானிஷ் ஃப்ளூ, ஹெச்ஐவி, டெங்கு என்ற வரிசையில் இப்போது கரோனா வைரஸ்.

மாற்றி யோசிக்கும் அவசியத்தை கரோனாவின் 2-வது அலை உருவாக்கியுள்ளது. இந்த வைரஸ் 100 நாட்கள் இருக்கும் என நிபுணர்கள் கணித்திருக்கின்றனர்.

அரசியல் பார்வை வேண்டாம்

அரசியல் கட்சிகள், அடுத்தவர்மேல் குற்றம் சாட்டும் அரசியல் பார்வையை விட்டு, அரசுடன் ஒத்துழைத்து, மக்களுடன் கலந்து கரோனா ஒழிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

மருத்துவ சேவை, நோய் தடுப்பு செயல்பாடுகளை மத்தியில் இருந்துசெயல்படுத்தாமல், மாநில, மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பில் விட்டு, அதிகாரத்தை பரவலாக்க வேண்டும்.மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளின் செயல்பாட்டை இரண்டாக பிரித்து கரோனா சேவைப் பிரிவு, கரோனா அல்லாத மருத்துவ சேவைப் பிரிவு என 2 பிரிவுகள் தொடங்க வேண்டும்.

அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சல் கண்டறியும் பிரிவை செயல்படுத்த வேண்டும். சந்தேகத்துக்குரிய நோயாளிகளுக்கு உடனே கரோனா பரிசோதனை செய்யவேண்டும். தொற்று இருப்பவர்களை சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டும். 100 படுக்கைகளுக்கு மேல் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்திலும், 50 சதவீதத்தை கரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும்.

அவசியமானால் கல்லூரி வளாகங்களையும், பெரிய லாட்ஜ்களையும் அரசு கையகப்படுத்தி, கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றலாம்.

அரசு, தனியார் மருத்துவமனைகள் என்று பிரித்துப் பார்க்காமல், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகள் தடையின்றி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு பாதுகாப்புக் கவசங்கள் வழங்க வேண்டும். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலோ, உயிரிழக்க நேரிட்டாலோ அரசு அறிவித்த நிவாரண நிதியை வழங்க வேண்டும்.

தடுப்பூசிகளை தயாரிக்க, தரமான இந்திய உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலமும் தங்களது மக்கள்தொகையில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். கரோனா தடுப்பூசி போடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். இவற்றை பின்பற்றினால், அனைத்து மாநிலங்களும் கரோனா அச்சம் இல்லாத, பாதுகாப்பான மாநிலங்களாக மாறிவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x