

கரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 16 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொற்றின் தீவிரத்தால் தினமும் 80-க்கும்மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். சென்னையில் மட்டும் தினமும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படுகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு படுக்கைகள் கிடைப்பதில்லை. அதனால், லேசான பாதிப்பு உள்ளவர்கள், அறிகுறிகள் இல்லாமல் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஓரளவு பாதிப்பு இருப்பவர்கள் கரோனாகண்காணிப்பு மையங்களிலும், தீவிரதொற்று பாதிப்பு உள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்படுகின்றனர். புதிதாக தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் நேரடியாக மருத்துவமனைகளுக்கு வரவேண்டாம் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
லேசான தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்வது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:
கரோனா பரவல் வேகம் கடந்த ஆண்டைவிட 10 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை மிக மிக அதிகரித்துள்ளது. அனைவரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைஅளிக்க முடியாது. தொற்று பாதிப்பு உள்ளவர்களில் 50 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 30 சதவீதம்பேர் மருத்துவமனைகளிலும், 20 சதவீதம் பேர் கரோனா கண்காணிப்பு மையங்களிலும் சிகிச்சை பெறுகின்றனர். தற்போதைய நிலையில் கரோனாவால் பாதிக்கப்படும் நபர்களில் 5-ல் 4 பேருக்கு லேசான அறிகுறிகள்தான் உள்ளது. அதனால், அவர்கள் வீடுகளிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
யார் யார் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்?
சளி, காய்ச்சல் குறைவாக உள்ளவர்கள், அறிகுறிகளே இல்லாதவர்கள் மருத்துவமனைக்கு செல்ல தேவைஇல்லை. அதேநேரம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதயநோய், நாள்பட்ட சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு உடையவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படியே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வீடுகளில் தனி அறை, தனி கழிப்பறை இருக்க வேண்டும்.
தனிமைப்படுத்திக் கொள்ள என்னென்ன தேவை?
வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கு ஆரோக்கிய உணவு அவசியம். அவர்களது அறைகளை தூய்மைப்படுத்துவதற்கான கிருமிநாசினிகள் கட்டாயம் இருக்க வேண்டும். கரோனா பாதித்தவர்களுக்கு தேவையான மருந்துகள், கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினி, முகக் கவசம் ஆகியவை போதிய அளவில் இருக்க வேண்டும். முகக் கவசங்களை 6 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். பல்ஸ் ஆக்ஸிமீட்டர், தெர்மோமீட்டர் வைத்து அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நோயாளியை கவனித்துக் கொள்பவரா நீங்கள்?
பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் கட்டாயம் கையுறை, 2 முகக் கவசங்கள் அணியவேண்டும். அவர்கள் நோயாளியின் அறையில் இருக்கும்போது கதவு, ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். தொற்றாளர்களுக்கு ஆதரவாக இருப்பது அவசியம்.
மருத்துவமனைக்கு யார் செல்ல வேண்டும்?
நோய் எதிர்ப்பாற்றல் குறைபாடு உடையவர்கள், புற்றுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.