சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவுகிறது; தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி வசதி இல்லை: சுகாதாரத் துறை அதிகாரிகள், டீன்கள் தகவல்

சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவுகிறது; தமிழக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி வசதி இல்லை: சுகாதாரத் துறை அதிகாரிகள், டீன்கள் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்தி வசதி இல்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள், டீன்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காததால் 7 நோயாளிகள் உயிரிழந்த சம்பவமும் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதாக தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. உலகில் 40 மருத்துவமனைகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 6 இந்திய மருத்துவமனைகளில் 4 தமிழகத்தில் இருக்கிறது. இந்தியாவில் சுயமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் 3 அரசு மருத்துவமனைகள் தமிழகத்தில் உள்ளன. இவ்வாறு பல்வேறு தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் திமுக ஆட்சியின்போதும் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை உட்பட 5 அரசு மருத்துவமனைகளில் கடந்த சில ஆண்டுகளில் அதிமுகவும் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைத்ததாக இருதரப்பினரும் கூறுகின்றனர். இது சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவமனை களின் டீன்கள் கூறியதாவது:

ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்தி வசதி இல்லை. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சேமிப்பு வசதி உள்ளது. வெளியில் இருந்து கொண்டு வரப்படும் ஆக்சிஜனை இங்கு சேமிக்கப்படுகின்றன.

கரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், சென்னை அண்ணா நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் தற்போதுதான் சோதனை முயற்சியாக தனியாருடன் இணைந்து ஆக்சிஜன்உற்பத்தி மையம் அமைக்கப்பட் டுள்ளது. அதேநேரம் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in