

கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் உற்பத்தி சார்ந்து உள்ள தொழில் நிறுவனங்களில், ஆயிரக்கணக்கான பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களுக்கு கட்டிங் உள்ளிட்ட பணிகளுக்கு ஆக்சிஜன் தேவை உள்ளது. கரோனா தொற்றின் தீவிரம் காரணமாக இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், மருத்துவ உபயோகத்துக்கு மட்டும் ஆக்சிஜன் விநியோகம் செய்ய வேண்டும் என ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுக்கு அதிகாரிகள் வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோவையில் ஆக்சிஜன் தேவையுள்ள தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சி.சிவக்குமார் கூறியதாவது:
தொழில் நிறுவனங்களில் லேசர் கட்டிங் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆக்சிஜன் தேவை உள்ளது. கோவையில் உள்ள பல நிறுவனங்கள் மருத்துவப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கும் ஆக்சிஜன் தேவை உள்ளது.
ஆக்சிஜன் விநியோகத்தில் மருத்துவத் தேவைக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அதேநேரத்தில் மருத்துவப் பொருட்கள் தயாரிப்பில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் ஆக்சிஜன் அவசியமானது. மருத்துவப் பொருட்கள் கிடைக்காவிட்டாலும் நோயாளிகளுக்குத்தான் பாதிப்பு.
இவ்விவகாரத்தில் முதல்கட்டமாக தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும், அடுத்து மருத்துவப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும், அடுத்து பிற தொழில் நிறுவனங்களுக்கும் என்ற அடிப்படையில் அனைவரது தேவைக்குமான ஆக்சிஜன் கிடைப்பதை அரசுதான் உறுதி செய்ய வேண்டும். இல்லையெனில், இது தொழில் துறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதேபோல, தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் நிறுத்தம் காரணமாக கோவையில் 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, தொழில் துறையினர் தெரிவித்தனர்.