

உதகையில் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், குன்னூரில் லாம்ஸ்ராக், டால்பினோஸ், காட்டேரி பூங்கா, சிம்ஸ் பூங்கா போன்ற பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்டகடை மற்றும் கை வண்டி வியாபாரிகள் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து சுற்றுலா தலங்களையும் மறு உத்தரவு வரும் வரை அடைக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக, பூங்காக்களில் புகைப்படம் எடுக்கும் கலைஞர்கள், சுற்றுலா வழிகாட்டிகள்,வாகன ஓட்டிகள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கட்டுமானப் பணிகள், தேயிலை தொழில் உள்ளிட்ட மாற்றுப் பணிகளுக்கு செல்ல வேண்டிய சூழல் வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து சுற்றுலா தலங்களும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதுதொடர்பாக உதகை தாவரவியல் பூங்காவில் புகைப்படம் எடுக்கும் ஷரீஃப் கூறும்போது, "கடந்தாண்டு ஊரடங்கால் கோடை சீசன் முழுவதும் தொழில் பாதிக்கப்பட்டது.
ஆண்டின் பிற்பாதியில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் முதல் பூங்காக்கள் திறக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டதால், மீண்டும் தொழில் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்தாண்டு மீண்டும் கரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், எங்களின் வாழ்வாதாரம்கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போது பரவல் தீவிரமாகியுள்ளதால், எப்போது சகஜ நிலை ஏற்படும் என தெரியவில்லை. பூங்காக்களில் படம் எடுக்கும் புகைப்பட கலைஞர்களால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் எடுக்க முடிவதில்லை. தொழில்ரீதியான புகைப்படக் கலைஞர்கள் எங்களுக்கு எதிர்ப்புதெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்தாண்டு கரோனா பரவல் தொடங்கியதிலிருந்தே சுப நிகழ்ச்சிகள் எளிமையாகவே நடத்தப்படுவதால், வாடிக்கையாளர்கள் செல்போன்களிலேயே புகைப்படங்கள் எடுத்து விடுகின்றனர். இதனால், வேறு தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை தவிர்த்தால், விவசாயம் அல்லது கட்டுமானத் தொழிலுக்குதான் செல்ல வேண்டும். பலர் தினக்கூலியாக மாறிவிட்டனர்" என்றார்.