

மழை பெய்யாததால் முதுமலையில் வறட்சி நிலவும் நிலையில், உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் பனியிலிருந்து தங்கள் பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் பனி பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தேயிலைச் செடிகளின் மேல் தென்னை ஓலைகள் மற்றும் வைக்கோல் வைத்து பாதுகாத்து வருகின்றனர். கடும் பனிப்பொழிவால் முதுமலை புலிகள் காப்பகத்தில் தாவரங்கள் காய்ந்து வருகின்றன. இதனால், பசுமை குறைந்து வறட்சி ஏற்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வனத்தீ ஏற்படும் சூழல் நிலவுகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் வாழும் உயிரினங்கள் தங்களின் தண்ணீர் தேவைக்கு மாயாறு ஆற்றையும், இப்பகுதியில் உள்ள குளங்களில் நிறையும் தண்ணீரையும் பயன்படுத்தி வருகின்றன. தற்போது வறட்சி தொடங்கியுள்ளதால் குளம், குட்டைகளிலும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. வனவிலங்குகள் தண்ணீருக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முதுமலை புலிகள் காப்பக வனத்துறையினர் கூறும்போது, "வன விலங்குகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய, புலிகள் காப்பகத்தின் உட்பகுதியில் வனத்துறை மூலமாக அமைக்கப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிமென்ட் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது. தினமும் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் டிராக்டர் மூலமாக எடுத்து வரப்பட்டு, பல இடங்களிலும் நிரப்பப்படுகின்றன" என்றனர்.