

சென்னையில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில், அம்மா உணவகங்களுக்கு வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அத்துடன், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. அதன்படி, 7 மாதங்களுக்குப் பிறகு நேற்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இதன் காரணமாக சென்னையில் உணவகங்கள், சாலையோர உணவகங்கள், பெட்டிக் கடைகள், டீ கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
ஆனால், அம்மா உணவகங்கள் வழக்கம்போல செயல்பட்டன. சமையலறை இல்லாத அறைகளில் தங்கியுள்ள மாணவர்கள், தொழிலாளர்கள், வீடுகளில் தனியாக வசித்து வரும் முதியோர், சாலையோரம் வசிக்கும் வீடற்றோர் அனைவரும் உணவுக்காக அம்மா உணவகங்களை நாடினர். இதனால் பல அம்மா உணவகங்களில் நேற்று வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் 407 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இன்று கூட்டம் அதிமாக இருக்கும் என்பதால், அந்தந்த உணவகங்களில் சூழலுக்கு ஏற்றவாறு கூடுதலாக உணவு சமைப்பதை, அந்தந்த சுகாதார ஆய்வாளர்களே முடிவெடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு பற்றாக்குறை இல்லை
உணவருந்த வரும் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து உணவை பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. எந்த இடத்திலும் உணவு பற்றாக்குறை ஏற்படவில்லை. உணவு கிடைக்காமல் யாரும் திரும்பிச் செல்லவில்லை’’ என்றனர்.