Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM
கரோனா முழு ஊரடங்கை முன்னிட்டு பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது என போலீஸார் தெரிவித்திருந்தனர். தடையை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சென்னை முழுவதும் போலீஸார் கண்காணிப்பு, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி, நேற்று கோயம்பேட்டில் போக்குவரத்து போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பெண் உட்பட 8 பேர் ஒரே ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்தபோது அவரிடம் ஓட்டுநர் உரிமம் கூட இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்ய போலீஸார் முடிவு செய்தனர்.
அப்போது, ஆட்டோவுக்குள் இருந்த மூதாட்டி அழுது கொண்டே இருந்தார். இதற்கான காரணம் குறித்து கேட்டபோது மூதாட்டியின் மகன் இறந்து விட்டதாகவும், அந்த துக்க நிகழ்ச்சிக்காக செல்வதாக ஆட்டோவில் வந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கண் கலங்கிய போலீஸார் மூதாட்டி காலை உணவு சாப்பிடவில்லை என்பதை அறிந்து அவர் உட்பட ஆட்டோவில் வந்தவர்களுக்கும் தங்களுக்காக வைத்திருந்த பார்சல் உணவைக் கொடுத்து மூதாட்டி உள்ளிட்டோரை அனுப்பி வைத்தனர். போலீஸாரின் இந்த செயலைக் கண்டு நெகிழ்ந்து போன மூதாட்டி போலீஸாரின் கைகளைப் பற்றி நன்றி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT