

திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, எல்லாபுரம், பூண்டி, கும்மிடிப்பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மல்லிகை, சாமந்தி, சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இதில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி வரை சாமந்திப் பூக்கள் பயிரிடப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 2019-20-ம் ஆண்டில் மாவட்டத்தில் 324 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் ஆர்வமுடன் சாமந்திப் பூக்கள் பயிரிட்டனர். ஆனால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால், சாமந்திப் பூ உள்ளிட்ட பூ வகைகளை சாகுபடி செய்த விவசாயிகள் அதிக நஷ்டமடைந்தனர்.
ஆகவே, மாவட்டத்தில் தற்போது 120 ஏக்கர் பரப்பளவில்தான் சாமந்திப் பூக்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அவ்வாறு பயிரிடப்பட்ட சாமந்தி செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கி வருகின்றன.
இதுகுறித்து, பெரியபாளையம் அருகே உள்ள புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாபு தெரிவித்ததாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் 300 ஏக்கருக்கும் மேல் சாமந்திப் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஊரடங்கால் பூக்களை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால், அதிக நஷ்டம்ஏற்பட்டதால், தற்போது குறைந்த பரப்பளவில் சாமந்திப் பூக்களை பயிரிட்டுள்ளோம். சாமந்திப் பூக்கள்தற்போது பூத்துக் குலுங்குவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த பூக்களை ஒரு நாள் அல்லது 2 நாட்கள் விட்டு, பறித்து வருகிறோம். ஒவ்வொரு நாளும் ஏக்கருக்கு 100 கிலோ முதல் 150 கிலோ வரை பூக்களைப் பறிக்கிறோம். அறுவடையின் முடிவில், ஏக்கருக்கு 6 டன்னுக்கு மேல் சாமந்திப் பூக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இப்பூக்களை, பஸ்கள், மின்சார ரயில்கள் மூலம் சென்னை - கோயம்பேடு, பாரிமுனை, திருத்தணி சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புகிறோம். தற்போது, வியாபாரிகள் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்கின்றனர்.
சாகுபடி முடிவடைய இன்னும் சில மாதங்கள் உள்ளதாலும், சாகுபடி பரப்பு குறைந்ததாலும் கொள்முதல் விலை மேலும்அதிகரித்து, ஏக்கருக்கு சுமார் 75 ஆயிரம் ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.