

அதிமுக பிரமுகர் வெடிகுண்டு வீசி கொலைசெய்யப்பட்ட வழக்கில் போலீஸார் 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு அருகே மறைமலை நகரைச் சேர்ந்தவர் திருமாறன்(50). அதிமுக பிரமுகரான இவர், மறைமலை நகர், பெரும்புதூர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வேலை ஆட்களை சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை வீட்டின் அருகே ஸ்ரீசெல்வமுத்து குமாரசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது பக்தர்போல் வந்த சிலர் திடீரென திருமாறன் மீது வெடிகுண்டுகளை வீசினர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது பாதுகாவலர் எழிலரசன், அந்த கும்பலை நோக்கி 6 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த சுரேஷ் (19) மீது மூன்று குண்டு துளைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் அங்கிருந்து தப்பினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாதுகாவலர் எழிலரசன் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலையாளிகளையும் கொலைக்கு உதவி செய்தவர்களையும் போலீஸார் 6 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே, 2 முறை கொலை முயற்சி நடந்துள்ளது. அதனால் அவருக்கு துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தேர்தல் நடைமுறை என்பதால் துப்பாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்ததேர்தலில் போட்டியிட்ட சிலர் தேர்தல் செலவுக்கு பணம் கேட்டு அவரை மிரட்டியுள்ளனர். பணம் தர மறுக்கவே இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது.
மேலும் தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுகிறது. இதனால் பல்வேறு கோணங்களில் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து, கொலையாளிகளை தேடி வருகிறோம். இதற்காக 6 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ஓரிரு தினங்களில் கொலையாளிகள் பிடிபடுவார்கள். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.