கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சென்னையில் 30 ஆயிரத்தை கடந்தது

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சென்னையில் 30 ஆயிரத்தை கடந்தது
Updated on
1 min read

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சென்னையில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்தது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. மொத்தம் 3 லட்சத்து 5,570 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 69,526 பேர் குணமடைந்துள்ளனர். 4,538பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31.506 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாகதேனாம்பேட்டை மண்டலத்தில் 3,318 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 3,295 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மேலும், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், ராயபுரம், அம்பத்தூர், கோடம்பாக்கம், அடையாறு ஆகிய 6 மண்டலங்களில் தலா 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் 21.93 சதவீதம் பேரும், 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 19.80 சதவீதம் பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘சென்னையில் கரோனா பரவலைக்கட்டுப்படுத்த பரிசோதனை எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றும் சுமார் 20 ஆயிரம்மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதை 25 ஆயிரமாகஉயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ள தெருக்கள் 249 ஆகவும் 6-க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ள தெருக்கள் 727 ஆகவும் உள்ளன. இத்தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மாநகராட்சியின் இதுபோன்ற நடவடிக்கைகள், அரசு தற்போது பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் ஆகியவை கரோனா பரவலை கட்டுப்படுத்த உதவும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in