Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM

உணர்வால், புகழால் எங்கும் நிறைந்திருக்கிறார் ஜெயகாந்தன்: பிறந்த நாள் கருத்தரங்கில் ஆளுமைகள் புகழாரம்

ஜெயகாந்தன்

சென்னை

உணர்வாலும், புகழாலும் எங்கும் நிறைந்திருக்கிறார் ஜெயகாந்தன் என்று, அவரது பிறந்த நாள் கருத்தரங்கில் ஆளுமைகள் புகழாரம் சூட்டினர்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 87-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், சர்வதேச அளவிலான இணையவழிக் கருத்தரங்கை இந்திய-ரஷ்ய வர்த்தகசபையும், ரஷ்ய கலாச்சார மையமும் இணைந்து நடத்தின. ‘இந்து தமிழ்’ நாளிதழும் எழுத்தாளுமையைக் கொண்டாடும் இந்நிகழ்வில் தன்னை இணைத்துக்கொண்டது. இதில், தமிழகம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜெயகாந்தன் வாசகர்கள் பங்கேற்றனர்.

ரஷ்ய கலாச்சார மையத்தின் இயக்குநர் கெனாடி ரகலேவ், திராவிடர் கழகப் பொதுச் செயலர் கி.வீரமணி, பத்மபூஷன் சிவதாணுப் பிள்ளை, திரைக் கலைஞர் நாசர், ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ், கலை இயக்குநர் ஜெயக்குமார், எஸ்பிஐ காப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த பி.பாலசேகர் ஆகியோருடன், ஆஸ்திரேலியாவிலிருந்து எழுத்தாளர் எல்.முருகபூபதி, கனடாவிலிருந்து எழுத்தாளர் மூர்த்தி, சிங்கப்பூரிலிருந்து தொலைக்காட்சி தயாரிப்பாளர் முகமது அலி, அமெரிக்காவிலிருந்து பொறியாளர் சிவகேசவன், பிரிட்டனிலிருந்து நாடகக் கலைஞர் பால சுகுமார், இலங்கையிலிருந்து எழுத்தாளர் எஸ்.மதுரகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்திய-ரஷ்ய நட்புறவு

இந்திய-ரஷ்ய வர்த்தக சபையின் பொதுச் செயலரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான பி.தங்கப்பன் பேசும்போது, “ரஷ்ய கலாச்சார மையத்தின் தூதரகப் பிரிவு, வரும் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடுகிறது. இதை திறந்துவைத்த நபர்களுள் ஜெயகாந்தனும் ஒருவர். இந்திய-ரஷ்ய நட்புறவைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஜெயகாந்தன் உறுதியாக இருந்தார்” என்றார்.

கெனாடி ரகலேவ் பேசும்போது, “ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்குமான உறவை மேம்படுத்துவதில் ஜெயகாந்தனுக்கு இருந்த ஈடுபாட்டை அனைவரும் அறிவோம்” என்றார்.

திக தலைவர் கி.வீரமணி பேசும்போது “நாங்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள், ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள், ஒரே பள்ளியில் படித்தவர்கள். நேரெதிரானக் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், ஒரே அளவுக்கான நட்போடு இருந்தோம். ஜெயகாந்தன் நம்மை விட்டு மறையவில்லை. இன்றைக்கும் அவர் உணர்வாலும், புகழாலும் எங்கும் நிறைந்திருக்கிறார்” என்றார்.

சிவதாணுப் பிள்ளை பேசும்போது, "ஜெயகாந்தன் உள்ளதை உள்ளபடி சொல்பவர், புரட்சிக் கருத்துகளை அச்சமின்றிப் பேசியவர், மனதைப் பண்படுத்தும் ஆசான். அவரது சொல்லாட்சி தமிழர்கள் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்றார்.

திரைக் கலைஞர் நாசர் பேசும்போது, "ஜெயகாந்தனுடன் நெருங்கிப் பழக முடியாததை நினைத்து வருந்தியிருக்கிறேன். ஆனால், பழக முடியாமல் போனாலும், அவர் சிருஷ்டித்த உலகில் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். மேலும், ஒரு நடிகராக தனக்கு ஜெயகாந்தனின் எழுத்து எப்படியெல்லாம் உதவியிருக்கிறது என்பதை நாசர் விவரித்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஜெயகாந்தனை நினைவுகூரும் நிகழ்ச்சியை, மேலும் விரிவாக நடத்த வேண்டும் என்ற திட்டத்துடன் கருத்தரங்கம் நிறைவடைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x