Published : 25 Apr 2021 08:57 PM
Last Updated : 25 Apr 2021 08:57 PM

நாங்களே ஆக்சிஜன் தயாரித்துத் தருகிறோம்; அரசிடம் ஸ்டெர்லைட் ஆலையை ஒப்படைக்கக்கூடாது: உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா கூடுதல் மனு

டெல்லி

ஸ்டெர்லைட் ஆலையை அரசு பயன்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்க அனுமதிக்கக் கூடாது, நாங்களே தயாரித்து அளிக்கிறோம் என வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆலையை மூட தூத்துக்குடி மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தினர். 100 நாட்கள் நடந்த போராட்டத்தின் முடிவில் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகம் நோக்கி நடந்த பேரணியில் கலவரம் வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடி சீல் வைக்கப்பட்டது.

நீதிமன்ற வழக்கும் அரசு எடுத்த முடிவுக்கு ஆதரவாக வந்தது. இந்நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவலால் ஆக்சிஜன் தேவை அதிகரித்ததை அடுத்து வேதாந்தா நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஆக்சிஜன் தயாரித்து தருவதாக அனுமதி கோரியது. இந்த வழக்கில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இன்னொரு வன்முறை சம்பவத்தை அரசு விரும்பவில்லை எனத் தெரிவித்தது.

அரசே ஆலையை ஏற்று ஆக்சிஜன் தயாரிக்கலாமே என உச்ச நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்தது. இதுகுறித்து அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக அரசு தெரிவித்தது. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது குறித்து நாளை அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்டி ஆலோசனை கேட்கிறார் முதல்வர்.

இந்நிலையில் திடீரென வேதாந்தா நிறுவனம் பல்டி அடித்துள்ளது. தமிழக அரசிடம் ஆக்சிஜன் தயாரிக்கும் நிபுணர்கள் இல்லை அதனால் நாங்களே தயாரித்துக் கொடுக்கிறோம் என கூடுதல் மனுவை தாக்கல் செய்துள்ளது.

வேதாந்தா தாக்கல் செய்த மனு விவரம்:

“ஸ்டெர்லைட் ஆலையில்ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொண்டு ஆக்சிஜன் மட்டுமே தயாரிப்போம், மேலும் ஆலைக்கு தேவையான ஆக்சிஜனை ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிலையத்தில் முதன் முதலில் தொடங்கியபோது அதற்கான பயிற்சி மற்றும் நிபுணத்தும் பெற 2 முதல் 3 மாத காலம் ஆனது.

தற்போதைய நிலையில் தமிழக அரசிடம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய போதிய நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்கள் இல்லை, எனவே ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கக்கூடாது.

மேலும் நிபுணத்துவம் பெறாதவர்களை கொண்டு ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முயல்வது என்பது அங்கு பணி புரிபவர்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும் சூழல் உருவாகும். அதேபோல நிபுணத்துவம் பெறாதவர்களை கொண்டு தயாரிக்கும் ஆக்சிஜனும் மருத்துவ பயன்பாட்டுக்கு உதவாத ஒன்றாகவே இருக்கும், அதைப் பயன்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.

எனவே மேற்கூறிய காரணங்களை கருத்தில் கொண்டு, வேதாந்தா நிறுவனத்திடமே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியை ஒப்படைக்க வேண்டும். தற்போதைய சூழலில் நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது, அதை போக்க உதவியாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு வழங்க தயாராக உள்ளோம்”.

இவ்வாறு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில் வேதாந்தா நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் ஆலை ஸ்ரீபெரும்புதூரில் வெற்றிகரமாக செயல்படும்போது நிபுணர்களே இல்லை என்கிற வாதம் எடுபடாது என்றபோதிலும், இதுகுறித்தும் நாளை அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் ஆலோசித்துத்தான் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும். அதன் பிறகே முடிவு தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x